World Cup 2023: உலகக் கோப்பையுடன் தெறிக்கவிடும் கொண்டாட்டம்! 20 ஐசிசி கோப்பைகளை வென்று சாதித்திருக்கும் ஆஸ்திரேலியா

உலகக் கோப்பை 2023 இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா ஆறாவது முறையாக உலக சாம்பியன் ஆனது. 2015ஆம் ஆண்டுக்கு பிறகு 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் உலகக் கோப்பையை வென்றுள்ளது.

அத்துடன் 2003க்கு பிறகு உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இரண்டாவது முறையாக இந்தியாவை வீழ்த்தியுள்ளது ஆஸ்திரேலியா. கடந்த மூன்று உலகக் கோப்பை தொடர்களை நடத்திய நாடுகளே வென்ற நிலையில், அதை மாற்றியமைத்துள்ளது.

இந்த வெற்றி குறித்து ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியதாவது: “கடைசி போட்டிக்காக எங்களது சிறந்த ஆட்டத்தை சேமித்து வைத்திருந்தோம். இன்று சேஸிங் செய்து எளிதாக இருக்கும் என கருதி அதை தேர்வு செய்தோம். நான் நினைத்து பார்த்தை விட ஆடுகளம் மெதுவாக இருந்தது. குறிப்பாக ஸ்பின் பந்துவீச்சில் சரியான லைனில் பந்து வீசினோம். மாறுபட்ட பவுன்ஸ் மூலம் கிடைத்த இரண்டு விக்கெட்டுகள் மாற்றத்தை ஏற்படுத்தியது. 300 ரன்களுக்கு குறைவான ஸ்கோரில் கட்டுப்படுத்த முயற்சித்தோம். அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது இதயத்துடிப்பை எகிறவைத்தாலும், ஹெட், மார்னஸ் ஆகியோர் ஆட்டத்தை எங்கள் வசம் ஆக்கினர். ஹெட்க்கு கையில் காயம் ஏற்பட்டிருந்தாலும் தேர்வாளர்கள் அவருக்கு ஆதரவு அளித்தனர். அது ரிஸ்காக பார்க்கப்பட்டாலும் பலன் கிடைத்துள்ளது. இந்த வெற்றி நீண்ட நாள்கள் மனதில் இருக்கும்” என்றார்

முதல் முறையாக ஆஸ்திரேலியா அணி 1987இல் ஆலன் பார்டர் தலைமையில் உலகக் கோப்பையை வென்றது. இதன் பின்னர் 1999இல் ஸ்டீவ் வாக் தலைமையிலும், 2003, 2007 ஆகிய ஆண்டுகளில் ஸ்டீவ் வாக் தலைமையிலும், 2015இல் மைக்கேல் கிளார்க் தலைமையிலும், தற்போது பேட் கம்மின்ஸ் கேப்டன்சியிலும் வென்றுள்ளது.

கடந்த 2021இல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரை முதல் முறையாக வென்ற ஆஸ்திரேலியா, தற்போது ஒரு நாள் உலகக் கோப்பை தொடரையும் வென்றுள்ளது. இதன் மூலம் டி20, ஒரு நாள் உலகக் கோப்பை என மொத்த 7 முறை சாம்பியன் ஆகியுள்ளது.

ஆஸ்திரேலியா ஆண்கள் அணியை போல், ஆஸ்திரேலியா பெண்கள் அணியும் டி20, ஒரு நாள் சேர்த்து 13 முறை சாம்பியன் ஆகியுள்ளது. ஆஸ்திரேலியா பெண்கள் அணி ஒரு நாள் போட்டியில் 1978, 1982, 1988, 1997, 2005, 2013, 2022 ஆகிய ஆண்டுகளிலும், டி20 போட்டிகளில் 2010, 2012, 2014, 2018, 2020, 2023 ஆகிய ஆண்டுகளிலும் சாம்பியன் ஆகியுள்ளது.

இதன் மூலம் 20 ஐசிசி கோப்பைகளை வென்ற அணி என்ற தனித்துவமான சாதனையை புரிந்துள்ளது ஆஸ்திரேலியா.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »