"NDA கூட்டணியிலிருந்து எல்லா கட்சிகளும் வெளியேறுகின்றன; CBI, ED தவிர!" – மோடியைச் சாடும் கே.டி.ஆர்

இன்னும் ஏழெட்டு மாதங்களில் வரவிருக்கும் லோக் சபா தேர்தலைச் சந்திக்க, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியும் இரு எதிரெதிர் துருவங்களாகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதேசமயம் இந்த இரு கூட்டணிகளையும் எதிர்த்து, தெலங்கானா முதல்வர் கே.சி.ஆர் தலைமையில் மூன்றாவது அணியை உருவாக்கலாம் என்றும் ஒவைசி போன்றோர் கூறிவருகின்றனர்.

மோடி

இவ்வாறான சூழலில், முன்பு ஒருமுறை கே.சி.ஆர், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர விருப்பம் தெரிவித்ததாகவும், தான் அதை நிராகரித்ததாகவும் மோடி கூறியது பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) கட்சியினரிடையே கடும் எதிர்ப்பைத் தூண்டியிருக்கிறது. அதாவது, தெலங்கானாவில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசிய மோடி, “ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.க 48 இடங்களில் வெற்றிபெற்றபோது, கே.சி.ஆர் டெல்லியில் என்னைச் சந்திக்க வந்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர விரும்புவதாகக் கூறினார். கூடவே, தனக்கும் ஆதரவளிக்குமாறு கேட்டார். அப்போது, `உங்களின் செயல்பாடுகளால் மோடி உங்களுடன் இணைய மாட்டார்’ என அவரிடமே கூறிவிட்டேன்” என்றார்.

இந்த நிலையில், மோடியின் இத்தகைய பேச்சுக்கு எதிர்வினையாற்றியிருக்கும் கே.சி.ஆரின் மகனும், மாநில அமைச்சருமான கே.டி.ராமாராவ், “பிரதமர் மோடி நன்றாகப் பொய் சொல்பவர். சிறந்த கதையாசிரியர். ஆஸ்கர்கூட வெல்லலாம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர எங்களை வெறிநாய் நாய் ஒன்றும் கடித்துவிடவில்லை. இன்றைக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அனைத்துக் கட்சிகளும் வெளியேறுகின்றன.

கே.டி.ராமாராவ்

சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் கட்சி, அகாலி தளம் உட்பட பல்வேறு கட்சிகள் உங்களிடமிருந்து (பா.ஜ.க) வெளியேறிவிட்டன. இப்போது உங்களுடன் யார் இருக்கிறார்கள்… சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறையைத் தவிர வேறு யாரும் உங்களுடன் இல்லை. 2018 தேர்தலில் 105 சட்டமன்றத் தொகுதிகளில் பா.ஜ.க டெபாசிட் இழந்தது, இந்த முறை அது 110-ஆக உயரும்” என்று கூறினார். தெலங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் ஆளும் பி.ஆர்.எஸ் Vs காங்கிரஸ் Vs பா.ஜ.க என மும்முனைப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *