191 அடி உயர கோபுரம், 10,000 சிலைகள், 183 ஏக்கர் – அமெரிக்காவில் உருவானது 2வது பெரிய இந்துக்கோயில்!

இந்த வளாகத்தில் மொத்தம் 13 கோயில்கள் உள்ளன. இதன் கட்டுமானத்துக்காக உலகெங்கிலும் இருந்து 2 மில்லியன் கன அடி உயர் ரகப் பளிங்குக் கற்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்தியச் சிற்பிகள் அவற்றைக் கலைநயத்துடன் சிற்பங்களாக தூண்களாக உருவாக்கியிருக்கிறார்கள்.

இவற்றில் பிரதான கோயில் ஒன்றின் கோபுரம் 191 அடி உயரத்தில் கற்கள் கொண்டே அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கோயில் உருவாக்கத்தில் சுமார் 13 ஆயிரம் பணியாளர்கள் கடந்த 12 ஆண்டுகளாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் கடின உழைப்பில் உருவான இந்த ஆலயம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் – 8) அன்று தொடக்க விழா கண்டது. இதையொட்டிப் பல சர்வதேசப் பிரமுகர்கள் விழாவில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

உலகின் இரண்டாவது பிரமாண்ட கோயில்

உலகின் இரண்டாவது பிரமாண்ட கோயில்

இந்தக் கோயில் வளாகத்தில் இந்துக்களின் சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் குறித்த ஆன்மிக அருங்காட்சியம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இளம் தலைமுறையினர் ஆன்மிகம் குறித்து அறிந்துகொள்ள உதவும் பல அரங்குகள் இந்த வளாகத்தில் உள்ளன. இது அமெரிக்க வாழும் இந்துக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்கிறார்கள்.

இதுகுறித்துக் கோயில் நிர்வாகம் சார்பில் பேசும்போது, “இது சமகாலத்தில் கட்டப்பட்ட இந்துக்கோயில்களில் மிகப்பெரியது. அமெரிக்க வாழ் இந்துக்களுக்குப் பெருமை சேர்க்கும் மிக பிரமாண்டமான கட்டுமானம் இது” என்கிறார்கள்.

சர்ச்சை

இந்த ஆலயத்தின் கட்டுமானப் பணிகளின் போது 2021-ம் ஆண்டு சில பணியாளர்கள் அமெரிக்க நீதிமன்றத்தை நாடினர். கோயில் நிர்வாகம் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கு மேல் வேலை வாங்குவதாகவும் குறைந்தபட்ச சம்பள விதியைப் பின்பற்றாமலும் செயல்படுவதாகவும் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் வளாகத்தில் சோதனை நடத்தி வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ள நிலையில் கோயில் வளாகம் பக்தர்கள் பார்வைக்காக வரும் அக்டோபர் 18-ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *