89 ரன்னில் சுருண்டது பாகிஸ்தான் 360 ரன் வித்தியாசத்தில் ஆஸி. அபார வெற்றி

பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்டில், ஆஸ்திரேலியா 360 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. பெர்த் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 487 ரன் குவித்த நிலையில், பாகிஸ்தான் 271 ரன்னுக்கு சுருண்டது. இதையடுத்து 216 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா, 3ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 84 ரன் எடுத்திருந்தது. கவாஜா 34, ஸ்மித் 43 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஸ்மித் 45, ஹெட் 14 ரன்னில் பெவிலியன் திரும்ப, கவாஜா – மிட்செல் மார்ஷ் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 126 ரன் சேர்த்தது.

கவாஜா 90 ரன் (190 பந்து, 9 பவுண்டரி) விளாசி ஷாகீன் அப்ரிடி வேகத்தில் பாபர் வசம் பிடிபட்டார். ஆஸ்திரேலியா 63.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 233 ரன் என்ற ஸ்கோருடன் 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. மிட்செல் மார்ஷ் 63 ரன்னுடன் (68 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் பந்துவீச்சில் குர்ரம் ஷாஷத் 3, ஷாகீன் அப்ரிடி, ஆமிர் ஜமால் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 450 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பாகிஸ்தான் 2வது இன்னிங்சை தொடங்கியது. ஆஸ்திரேலிய வீரர்களின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய பாக்.

பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து அணிவகுத்தனர். சவுத் ஷகீல் அதிகபட்சமாக 24 ரன், பாபர் 14, இமாம் உல் ஹக் 10 ரன் எடுக்க, மற்ற அனைவரும் சொற்ப ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். பாகிஸ்தான் 30.2 ஓவரில் 89 ரன் மட்டுமே சேர்த்து 2வது இன்னிங்சில் ஆல் அவுட்டானது. அப்ரிடி 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸி. பந்துவீச்சில் ஸ்டார்க், ஹேசல்வுட் தலா 3, லயன் 2, கம்மின்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். ஆஸ்திரேலியா 360 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. மார்ஷ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஆஸி. 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் டிச.26ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *