400 மீட்டர் தடகள டிராக்கில் எத்தனை இடையூறுகள்; கொசுக்களை உற்பத்தி செய்யும் தண்ணீர் தேங்கிய பள்ளம்

மதுரை : மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் காலாவதியான 400 மீட்டர் செயற்கை தடகள டிராக்கை சுற்றிலும் உள்ள வேலி ஆங்காங்கே உடைந்துள்ளது. டிராக்கில் தண்ணீர் தேங்கி கொசுக்களை உற்பத்தி செய்கிறது.

கடந்த 2006 ல் அமைக்கப்பட்ட இந்த டிராக்கின் ஆயுட்காலம் பத்தாண்டுகள் தான். பகலில் வெயிலின் சூடு தாங்காமல் டிராக்கில் பதிக்கப்பட்டுள்ள ரப்பர் துகள்கள் மேலெழும்பியுள்ளன. ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்கு வருவதற்கு 5 வழிகள் இருப்பதால், மற்றவர்கள் டிராக்கில் நுழையாமல் இருப்பதற்காக கம்பி வலைகளால் சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. 15க்கும் மேற்பட்ட இடங்களில் கம்பி வலை பெயர்த்தெடுக்கப்பட்டும் வளைக்கப்பட்டும் டிராக்கிற்குள் செல்ல பாதை உருவாக்கப்பட்டுள்ளது. ஓட்டை உடைசல் தடுப்பு வேலியால் பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.

சர்வதேச, தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் ‛ஸ்டீப்பிள் சேஸ்’ என்றொரு போட்டி நடத்தப்படும். விளையாட்டு வீரர்கள் ஓடிக்கொண்டே வந்து பள்ளத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ள தடுப்பு கம்பி மீது ஏறி தண்ணீரில் குதித்து மீண்டும் ஓட வேண்டும். பள்ளிக்கல்வித்துறையில் இந்த விளையாட்டு இல்லையென்றாலும் மதுரையில் நடந்த தேசிய போட்டியில் இந்த விளையாட்டு நடத்தப்பட்டது. போட்டி நேரம் தவிர மீதி நேரத்தில் தண்ணீரை வடித்து விடுவர்.

இங்குள்ள மழைநீர் வடிகால் வசதி முறையாக இல்லாததால் சமீபத்தில் பெய்த மழையில் ‛ஸ்டீப்பிள் சேஸ்’ பள்ளத்தில் தண்ணீர் தேங்கி பச்சை நிறத்தில் உள்ளது. அதில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மிதக்கின்றன. விளையாடுபவர்கள் மட்டுமின்றி இங்கேயே விடுதியில் 140 மாணவர்கள் தங்கி பயில்கின்றனர். காலை, மாலை தடகள டிராக்கில் பயிற்சி பெறுகின்றனர். மழைநீரில் எளிதாக டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சலுக்கு வழிவகுக்கும். இதுபற்றிய விழிப்புணர்வு இல்லாததால் பள்ளத்தில் தேங்கியுள்ள நீரை யாரும் கண்டு கொள்ளவில்லை.

புதிய டிராக் அமைப்பதற்கு முன் வேலியை சரிசெய்ய வேண்டும். தொடர்ந்து மழைக்காலம் என்பதால் பள்ளத்தில் தேங்கும் மழைநீரை தினமும் வடியச் செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *