40 ஆண்டுகளாக கண்மாய் தூர்வாரப்படவில்லை; பறவைகள் எப்படி வரும்

முதுகுளத்துார் : ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே சித்திரங்குடி கண்மாய் 40 ஆண்டுகளுக்கும் மேலாக துார்வாரப்படாததால் கருவேல் மரங்கள் வளர்ந்து புதர் மண்டியும், வரத்து கால்வாய்கள் மணல்மேடாகியதால் பருவமழை காலத்தில் கூட தண்ணீர் தேங்காத அவலநிலை உள்ளது. இதனால் சரணாலயத்தில் பறவைகளின்றி வெறிச்சோடியது.

முதுகுளத்துார் அருகே சித்திரங்குடி கண்மாயில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு சீசன் காலத்தில் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்து செல்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக போதுமான அளவு தண்ணீர் தேங்காததால் பறவைகள் வருவதில்லை.

கண்மாயில் கருவேல் மரங்கள் வளர்ந்து புதர்மண்டியும், வரத்து கால்வாய், கரைகள் துார்ந்து காணப்படுவதால் தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை. திறந்து விடப்படும் தண்ணீரும் முழுமையாக சித்திரங்குடி கண்மாய்க்கு வந்து சேர்வது கிடையாது. இதனால் ஓரளவு தேங்கும் தண்ணீரை பறவைகள் பயன்படுத்துகின்றன.

கிராம மக்கள் கூறியதாவது:

சித்திரங்குடி கண்மாய் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக துார்வாரப்படாமல் உள்ளது. பொதுப்பணித்துறை, வனத்துறையினர் மராமத்து பணி செய்வதில்லை. இதனால் பருவமழைக் காலத்தில் ஆறுகளில் திறந்து விடப்படும் தண்ணீர் முழுமையாக சித்திரங்குடி கண்மாய்க்கு வந்து சேர்வதில்லை.

மழைநீரை தேக்கி வைக்க முடியாத அவலநிலை உள்ளது. கண்மாய் கரைகள், மடைகள் துார்ந்து போனதால் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி வீணாகிறது. கருவேல மரங்களும் புதர்மண்டி இருப்பதால் பறவைகள் வாழ்வதற்கு போதுமான இடம் கிடைப்பதில்லை.

மரங்கள் பட்டுப்போனதால் தரிசாக காணப்படுகிறது. வெளிநாட்டு பறவைகள் அதிகம் வருவதில்லை. பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே பல ஆண்டுகளாக துார்வாரப்படாத சித்திரங்குடி கண்மாயை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பறவைகள் சரணாலயத்தை பாதுகாக்கவும், தண்ணீர் தேக்கவும் வசதியாக மராமத்து பணிகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *