309 ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்தை நொறுக்கியது ஆஸி.

புதுடெல்லி: ஐசிசி உலக கோப்பை தொடரின் 24வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியுடன் மோதிய ஆஸ்திரேலியா, 309 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது. அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. மார்ஷ், வார்னர் இணைந்து ஆஸி. இன்னிங்சை தொடங்கினர். மார்ஷ் 9 ரன்னில் வெளியேற, அடுத்து வார்னர் – ஸ்மித் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 132 ரன் சேர்த்தனர். ஸ்மித் 71 ரன் (68 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அவுட்டானார்.

தொடர்ந்து நெதர்லாந்து பந்துவீச்சை பதம் பார்த்த வார்னர் – லாபுஷேன் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 84 ரன் சேர்த்தது. லாபுஷேன் 62 ரன் (47 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), இங்லிஸ் 14 ரன், வார்னர் 104 ரன் (93 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். 6வது வீரராகக் களமிறங்கிய மேக்வெல் பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்டு 27 பந்தில் அரை சதம், 40 பந்தில் சதம் என நெதர்லாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தார். அவரது ருத்ரதாண்டவத்தை பார்த்து மிரண்ட நெதர்லாந்து வீரர்கள் செய்வதறியாது ஸ்தம்பித்து நின்றனர். கிரீன் 8 ரன், மேக்ஸ்வெல் 106 ரன் (44 பந்து, 9 பவுண்டரி, 8 சிக்சர்), மிட்செல் ஸ்டார்க் கோல்டன் டக் அவுட்டாக… ஆஸ்திரேலியா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 399 ரன் குவித்தது. கேப்டன் கம்மின்ஸ் 12 ரன், ஸம்பா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நெதர்லாந்து பந்துவீச்சில் வான் பீக் 4, டி லீட் 2, ஆர்யன் தத் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 50 ஓவரில் 400 ரன் எடுத்தால் வெற்றி என்ற மிகக் கடினமான இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து, 21 ஓவர் மட்டுமே தாக்குப்பிடித்து வெறும் 90 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க வீரர் விக்ரம்ஜித் அதிகபட்சமாக 25 ரன் எடுத்தார். தேஜா 14, சைப்ரண்ட் 11, ஆக்கர்மேன் 10 ரன் எடுக்க, மற்ற வீரர் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர் (3 பேர் டக் அவுட்). கேப்டன் ஸ்காட் 12 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நெதர்லாந்து கடைசி 6 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்தது குறிப்பிடத்தக்கது. ஆஸி. பந்துவீச்சில் ஆடம் ஸம்பா 3 ஓவரில் 8 ரன்னுக்கு 4 விக்கெட் வீழ்த்தினார். மார்ஷ் 2, கம்மின்ஸ், ஹேசல்வுட், ஸ்டார்க் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். மேக்ஸ்வெல் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

* நடப்பு தொடரில் தொடர்ச்சியாக 2வது சதம் விளாசிய மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் டேவிட் வார்னர். உலக கோப்பையில் தனது 6வது சதத்தை பதிவு செய்துள்ள வார்னர், சக வீரர் பான்டிங் சாதனையை (5 சதம்) முறியடித்ததுடன் சச்சின் டெண்டுல்கருடன் 2வது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். இந்த வரிசையில் ரோகித் (7 சதம்) முதலிடம் வகிக்கிறார்.

ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *