2வது டி.20போட்டியில் இந்தியா தோல்வி; தெ.ஆப்ரிக்கா முதல் 6 ஓவரிலேயே வெற்றியை பறித்து விட்டது: கேப்டன் சூர்யகுமார் பேட்டி

கெபேஹா: இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2வது போட்டி கெபேஹா மைதானத்தில் நேற்றிரவு நடந்தது. டாஸ் வென்ற தென்ஆப்ரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த இந்தியா 19.3 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 180 ரன் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் இந்திய இன்னிங்ஸ் அத்துடன் முடித்துக்கொள்ளப்பட்டது. அதிகபட்சமாக ரிங்குசிங் நாட் அவுட்டாக 68 (39பந்து, 9 பவுண்டரி,2 சிக்சர்), கேப்டன் சூர்யகுமார் 56 (36பந்து), திலக்வர்மா 29 , ஜடேஜா 19 ரன் எடுத்தனர்.

துவக்க வீரர்கள் ஜெய்ஸ்வால், கில் டக்அவுட் ஆகினர். தென்ஆப்ரிக்க பவுலிங்கில் ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட் வீழ்த்தினார். மழையால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் ஆட்டம் மீண்டும் தொடங்கிய நிலையில், டக்வொர்த் லூயிஸ் விதிப்படி தென்ஆப்ரிக்காவுக்கு 15 ஓவரில் 152 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் அதிரடியாக தொடங்கிய தென்ஆப்ரிக்கா 6 ஓவரிலேயே 78 ரன் சேர்த்தது. ரீசா ஹென்ட்ரிக்ஸ் 27 பந்தில், 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 49, மத்தேயு ப்ரீட்ஸ்கே 16, கேப்டன் மார்க்ரம் 30(17பந்து), கிளாசென் 7, டேவிட் மில்லர் 17 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். 13.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 154 ரன் எடுத்த தென்ஆப்ரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 14, பெலுக்வாயோ 10 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்திய பவுலிங்கில் முகேஷ்குமார், 2, சிராஜ், குல்தீப் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

தோல்வி குறித்து இந்திய கேப்டன் சூர்யகுமார் கூறியதாவது: எங்கள் பேட்டிங்கில் எந்த குறையும் இல்லை என்றே நினைக்கிறேன். சராசரிக்கும் அதிகமான ஸ்கோரை தான் பதிவு செய்தோம். ஆனால் தென்ஆப்ரிக்கா வீரர்கள் முதல் 5 முதல் 6 ஓவரில் மிகச்சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இதுபோன்ற ஒரு கிரிக்கெட்டை தான் நாங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று பேசி வருகிறோம். தற்போது அந்த கருத்து இன்னும் சத்தமாக எங்களுக்கு கூறப்பட்டுள்ளதாக கருதுகிறேன். இந்த சூழலில் பவுலிங் செய்வதே கொஞ்சம் கடினமான ஒன்றாகும்.

பந்து ஈரமாக இருந்ததால் கிரிப் செய்ய முடியவில்லை. இது போன்ற வெளிநாட்டு சூழலில் விளையாடுவது இளம்வீரர்களுக்கு நல்ல அனுபவத்தை தரும் என்று நினைக்கிறேன். வெற்றி, தோல்வியை கடந்து அணியில் உள்ள அனைத்து வீரர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஏனென்றால் மைதானத்தில் என்ன நடந்தாலும் அதனை மைதானத்திலேயே விட்டுவிட வேண்டும் என்று கூறியிருக்கிறேன். நிச்சயம் 3வது டி20 போட்டியில் விளையாட ஆவலுடன் இருக்கிறோம், என்றார்.

தென்ஆப்ரிக்க கேப்டன் மார்க்ரம் கூறுகையில்,மழை எங்களுக்கு கொஞ்சம் உதவியது. பந்துவீச்சாளர்கள் கடினமாக முயற்சி செய்து, நம்பமுடியாத அளவிற்கு சிறப்பாக பந்துவீசினர். ஹென்ட்ரிக்ஸ் அருமையாக பேட் செய்து கொஞ்சம் தலைமைப் பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார், என்றார். இந்த வெற்றி மூலம் 1-0 என தென்ஆப்ரிக்கா முன்னிலை வகிக்க கடைசி போட்டி நாளை ஜோகன்னஸ்பர்க்கில் நடைறெ உள்ளது.

ஷூவை கழற்றி கொண்டாடியது ஏன்?: 4 ஓவரில் 18 ரன் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்திய தப்ரைஸ் ஷம்சி ஆட்டநாயகன் விருது பெற்றார். விக்கெட் எடுத்தால் ஷூவை கழற்றி காதில் வைத்து ஃபோன் செய்வது போல் கொண்டாடக்கூடிய அவர் சமீப காலங்களாக அதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று சூர்யகுமார் விக்கெட்டை எடுத்தபோது அதுபோல் கொண்டாடினார். இதுபற்றி அவர் கூறியதாவது: “நான் அப்படியான கொண்டாட்டத்தை நிறுத்தி வைத்திருந்தேன். ஆனால் குழந்தைகள் அந்த மாதிரி செய்யும்படி தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டனர். அவர்களை என்னால் ஏமாற்ற முடியவில்லை. அதனால்தான் அப்படி செய்தேன்.

இந்தியாவுக்கு எதிராக அழுத்தத்தின் கீழ் சிறப்பாகச் செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. சூரியகுமார் மிகச் சிறந்த வீரர். இன்றும் அவர் அதை காட்டினார். களத்தில் கேப்டன் மார்க்ரம் மிகச் சிறப்பான மாற்றங்களை செய்து கொண்டே இருந்தார். அந்த மாற்றங்கள் அற்புதமாக இருந்தது. எங்கள் அணியில் தற்பொழுது நல்ல நேர்மறையான சூழல் காணப்படுகிறது. அணி நிர்வாகத்தில் ராப் உள்ளே வந்தவுடன், எங்கள் குடும்பத்தாரையும் எங்களுடன் இருக்க அனுமதித்தார். இதனால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியான கிரிக்கெட் விளையாடி, வெற்றி பெற முயற்சிப்பதை பார்க்கலாம், என்றார்.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *