வெற்றி கட்டாயம் என்ற நெருக்கடியுடன் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து இலங்கையுடன் இன்று பலப்பரீட்சை

பெங்களூரு: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் 25வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், முன்னாள் சாம்பியன் இலங்கையும் ‘வெற்றி அல்லது வெளியேற்றம்’ என்ற இக்கட்டான நிலையில் இன்று மோதுகின்றன. நடப்பு சாம்பியன் என்ற கோதாவுடன் பந்தாவாக வந்த இங்கிலாந்து அணி, முதல் ஆட்டத்திலேயே நியூசியிடம் உதை வாங்கியது. அடுத்து வங்கதேசத்தை 137 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியதால் சற்று உற்சாகமான அந்த அணி… அதன் பிறகு ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சி தோல்வியை பரிசாகப் பெற்றது. அடுத்து தென் ஆப்ரிக்காவிடம் டோட்டல் சரண்டராக, இதுவரை 2 புள்ளிகள் மட்டுமே பெற்று 9வது இடத்தில் பின்தங்கியுள்ளது.

அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய தொடர்ச்சியாக 5 போட்டியிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி உள்ளது. பேட்டிங்கில் முன்னணி வீரர்கள் தொடர்ச்சியாக சொதப்பி வருவதே இங்கிலாந்து அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக உள்ளது. ஆல்ரவுண்டர்கள், பந்துவீச்சாளர்கள் பங்களிப்பும் போதுமானதாக இல்லை. சிறப்பாக பந்துவீசிக் கொண்டிருந்த ரீஸ் டாப்லி காயம் காரணமாக அணியில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் பிரைடன் கேர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் ஏதாவது மேஜிக் நிகழ்த்தமாட்டார்களா? என்பதே நடப்பு சாம்பியன் இங்கிலாந்தின் கடைசி நம்பிக்கையாக உள்ளது.

ஏறக்குறைய அதை நிலைமையில் தான் குசால் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணியும் உள்ளது. தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவிடம் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்த இலங்கை, 4வது போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி புள்ளிக் கணக்கை தொடங்கியிருக்கிறது. கேப்டன் தசுன் ஷனகாவை தொடர்ந்து மதீஷா பதிரணாவும் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார். அதனால் உள்ளே வந்துள்ள முன்னாள் கேப்டனும் ஆல் ரவுண்டருமான ஏஞ்சலோ மேத்யூஸ் ஏதாவது சாதிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைப்பதற்காக இரு அணிகளுமே வரிந்துகட்டுவதால், இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *