விடை பெறும் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து பாகிஸ்தானை ‘பேக்’ செய்யுமா?

கொல்கத்தா:ஐசிசி உலக கோப்பை போட்டியின் 44வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து – முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் இன்று மோதுகின்றன. இங்கிலாந்து அரையிறுதி வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்டது. ஒரே ஒரு வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த இங்கிலாந்து சில நாட்களுக்கு முன்பு நெதர்லாந்தை வீழ்த்தியது. அதனால் 7வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. அந்த இடத்தை தக்கவைக்க வேண்டும் என்றால் இன்று அந்த அணி கட்டாயம் வென்றாக வேண்டும். அதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு நேரடியாக இங்கிலாந்து தகுதி பெறும்.

இந்த உலக கோப்பை லீக் சுற்றின் முடிவில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னேற முடியும். உலக கோப்பையை தக்கவைக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டதே கடுமையான விமர்சனத்தை கிளப்பியுள்ள நிலையில், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்துக்கு நெருக்கடி நீடிக்கிறது. ஸ்டோக்ஸ், வோக்ஸ் ஃபார்முக்குத் திரும்பியுள்ளது அந்த அணியின் தன்னம்பிக்கையை ஓரளவு உயர்த்தியுள்ளது என்றே சொல்லலாம். அதே சமயம், பாகிஸ்தான் தலா 2 வெற்றி, தோல்விகளுடன் பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறது.

இன்றைய ஆட்டத்தில் வென்றால் பாபர் ஆஸம் தலைமையிலான பாக். அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது. ஆனால், மொத்த ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணியை முந்தினால் மட்டுமே அது சாத்தியமாகும்.  இன்றுடன் விடைபெறும் இங்கிலாந்து அணிக்கு பாக். ‘டாட்டா’ காட்டுமா… இல்லை இங்கிலாந்து தன்னுடன் பாக். அணியையும் ‘பேக்’ செய்து அழைத்துச் செல்லுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இரு அணிகளுக்கும் இது கடைசி லீக் ஆட்டம் என்பதால் வெற்றிக்காக தங்களின் முழுத்திறனை வௌிப்படுத்த வரிந்துகட்டுகின்றன.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »