“வலி தாங்க முடியல, ஊசி ஏதாவது போடுங்க அண்ணா”.. ஆம்புலன்ஸில் துடிதுடித்து சொன்ன ரிஷப் பண்ட்

டேராடூன்: கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், ஆம்புலன்ஸில் போகும் போது மருந்தாளரிடம் பேசிய விஷயங்கள் தற்போது வெளியே வந்துள்ளன.

ஆம்புலன்ஸில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ரிஷப் பண்ட், தன்னால் வலி தாங்க முடியவில்லை என்றும், வலி ​​ஊசி ஏதாவது போடுங்கள் எனவும் கண்ணீர் மல்க கூறியதாக மருந்தாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், ரிஷப் பண்ட் தன்னிடம் என்னென்ன பேசினார் என்று அந்த மருந்தாளர் சோகத்துடன் பகிர்ந்து கொண்டார்.

  பயங்கர விபத்து

பயங்கர விபத்து

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், நேற்று அதிகாலை உத்தராகண்டில் பயங்கர கார் விபத்தில் சிக்கினார். சாலையின் சென்டர் மீடியனில் மோதிய அவரது கார், சுமார் 300 மீட்டர் குட்டிக்கரணம் அடித்துச் சென்று கவிழ்ந்து தீப்பிடித்தது. அதிர்ஷ்டவசமாக அங்கு வந்த பேருந்து ஓட்டுநர், காரின் கண்ணாடியை உடைத்து ரிஷப் பண்டை வெளியே இழுத்து காப்பாற்றினார். தலை, முதுகு, கழுத்து, கால் என அனைத்து இடங்களிலும் அடிபட்டு ரிஷப் பந்துக்கு ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. பிறகு, 108 ஆம்புலன்ஸை வரவழைத்து ரிஷப் பண்டை அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

“அண்ணா வலி தாங்க முடியல”..

ஆம்புலன்ஸில் சென்று கொண்டிருந்த ரிஷப் பண்டுக்கு அங்கிருந்த மருந்தாளர் மோனு குமார் முதலுதவி செய்து கொண்டிருந்தார். உடல் முழுவதும் அடிபட்டு ரத்தம் வழிந்து கொண்டிருந்ததால், ரிஷப் பண்ட் முனங்கிக் கொண்டே இருந்துள்ளார். பொதுவாக, இதுபோல விபத்தில் சிக்கியவர்கள் சுயநினைவை இழக்காமல் இருக்க, அவர்களுடன் பேசிக்கொண்டே இருக்க வேண்டும். அதன் பொருட்டு, மருந்தாளர் மோனு குமார், அவரிடம் “உங்கள் பெயர் என்ன?” அதற்கு, “என் பெயர் ரிஷப் பண்ட். இந்திய கிரிக்கெட் அணி வீரர்” எனக் கூறியுள்ளார். பின்னர் ரிஷப் பண்ட், “அண்ணா, என்னால் வலியை தாங்க முடியவில்லை. ஏதாவது வலி ஊசி (pain killer) இருந்தால் போடுங்கள்” என கண்ணீருடன் கூறியுள்ளார்.

“பெரிய தனியார் மருத்துவமனை போங்க”..

இதன் தொடர்ச்சியாக, மோனு குமார் அவருக்கு ‘பெய்ன் கில்லர்’ ஊசியை போட்டுவிட்டுள்ளார். இதையடுத்து, “எந்த மருத்துவமனைக்கு சென்று கொண்டிருக்கிறோம்” என ரிஷப் பண்ட் கேட்டுள்ளார். அதற்கு மோனு குமார், “பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். அதற்கு ரிஷப் பண்ட், “அரசு மருத்துவமனை வேண்டாம்.. ஏதாவது பெரிய தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள்” எனக் கூறியிருக்கிறார். இதனால், அந்த இடத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் சக்ஷாம் மருத்துவமனைக்கு ரிஷப் பண்டை மோனு குமார் அழைத்துச் சென்றுள்ளார்.

“அம்மா நம்பர் மட்டும்தான் நியாபகம் இருக்கு”

அப்போது, ​​”விபத்து எப்படி நடந்தது?” என மோனு குமார் கேட்டதற்கு, “எனக்கு எதுவும் நினைவில்லை. ஏதோ கல் மீது கார் ஏறியது மட்டுமே நினைவில் இருக்கிறது. பிறகு கண்ணை திறந்து பார்த்த போது என்னை சுற்றி தீ எரிந்துக் கொண்டிருந்தது” என ரிஷப் பண்ட் கூறியுள்ளார். தொடர்ந்து, “உங்கள் குடும்பத்தில் யாரை அழைக்கலாம்?” எனக் கேட்டதற்கு, “என் தாயாரின் செல்போன் எண் மட்டுமே எனக்கு நியாபகம் இருக்கிறது. வேறு யாருடைய எண்ணமும் நினைவில் இல்லை” என ரிஷப் கூறியிருக்கிறார். எனினும், அவர் கூறிய செல்போன் எண் சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. இதையடுத்து, போலீசார் வந்த பின்னரே அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *