வங்கதேசத்தை வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா: 3வது சதம் விளாசினார் டி காக்; 2வது இடத்துக்கு முன்னேற்றம்

ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் 23வது லீக் ஆட்டத்தில், வங்கதேச அணியை 149 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய தென் ஆப்ரிக்கா புள்ளிப் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது. தொடக்க வீரர் டி காக், நடப்பு தொடரில் 3வது சதம் அடித்து அசத்தினார். வாங்கடே மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பேட் செய்தது. டி காக், ஹெண்ட்ரிக்ஸ் இணைந்து இன்னிங்சை தொடங்கினர். ஹெண்ட்ரிக்ஸ் 12 ரன் எடுத்து ஷோரிபுல் பந்துவீச்சில் கிளீன் போல்டாக, அடுத்து வந்த வாண்டெர் டுஸன் 1 ரன்னில் வெளியேறினார். தென் ஆப்ரிக்கா 7.5 ஓவரில் 36 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறிய நிலையில், டி காக் – கேப்டன் மார்க்ரம் ஜோடி பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தியது.

இருவரும் 3வது விக்கெட்டுக்கு 131 ரன் சேர்த்தனர். மார்க்ரம் 60 ரன் (69 பந்து, 7 பவுண்டரி) விளாசி ஷாகிப் ஹசன் பந்துவீச்சில் லிட்டன் தாஸ் வசம் பிடிபட்டார். இதையடுத்து, டி காக் – கிளாஸன் இணைந்து வங்கதேச பந்துவீச்சை பதம் பார்த்தனர். டி காக் 101 பந்தில் சதம் விளாச, கிளாஸன் 34 பந்தில் அரை சதம் அடித்தார். டி காக் நடப்பு தொடரில் தனது 3வது சதத்தை பதிவு செய்து சாதனை படைத்தார். பவுண்டரியும், சிக்சருமாகப் பறக்கவிட்ட இருவரும் 4வது விக்கெட்டுக்கு அதிரடியாக 142 ரன் சேர்த்து மிரட்டினர். டி காக் 174 ரன் (140 பந்து, 15 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி ஹசன் மகமூத் பந்துவீச்சில் நசும் அகமதுவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

கடைசி கட்டத்தில் கிளாசன் – மில்லர் இணைந்து ருத்ரதாண்டவமாடினர். கிளாஸன் 90 ரன் (49 பந்து, 2 பவுண்டரி, 8 சிக்சர்) விளாசி விக்கெட்டை பறிகொடுத்தார். தென் ஆப்ரிக்கா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 382 ரன் குவித்தது. மில்லர் 34 ரன் (15 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்), யான்சென் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேச பந்துவீச்சில் ஹசன் மகமூத் 2, ஷாகிப் ஹசன், ஷோரிபுல், மிராஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து இமாலய இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால் 22 ஓவரில் 81 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறியது. தாஸ் 22, டன்ஸித் 12, மிராஸ் 11 ரன் எடுக்க, ஷான்டோ (கோல்டன் டக் அவுட்), கேப்டன் ஷாகிப் 1, முஷ்பிகுர் 8 ரன்னில் வெளியேறினர்.

இந்த நிலையில், மகமதுல்லா – நசும் அகமது ஜோடி 7வது விக்கெட்டுக்கு 41 ரன் சேர்த்தது. நசும் 19 ரன் எடுத்து கோட்ஸீ பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஹசன் மகமூத் 15 ரன்னில் பெவிலியன் திரும்பினார். சக வீரர்கள் கை கொடுக்காவிட்டாலும், தனி ஒருவனாகப் போராடிய மகமதுல்லா சதம் அடித்தார். அவர் 111 ரன் (111 பந்து, 4 சிக்சர், 11 பவுண்டரி) எடுத்திருந்த நிலையில், கோட்ஸீ பந்துவீச்சில் மார்கோ யான்செனிடம் பிடிபட்டார். வங்கதேசம் 46.4 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 233 ரன் எடுத்து, 149 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் கோட்ஸீ 3, மார்கோ யான்சென் 2, ரபாடா 2, வில்லியம்ஸ் 2, மகராஜ் 1 விக்கெட் வீழ்த்தினர். டி காக் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 5 போட்டியில் 4வது வெற்றியை பதிவு செய்த தென் ஆப்ரிக்கா (8 புள்ளி), ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்தை பின்னுக்குத் தள்ளி 2வது இடத்துக்கு முன்னேறியது.

ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *