ராய்ப்பூரில் நாளை 4வது டி.20 போட்டி; தொடரை வெல்லுமா இந்தியா?: ஸ்ரேயாஸ் அய்யர் களம் இறங்குகிறார்

ராய்ப்பூர்: இந்தியா -ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் முதல் 2 போட்டியில் இந்தியா வென்ற நிலையில் 3வது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்நிலையில் 4வது டி.20 போட்டி நாளை ராய்ப்பூரில் நடக்கிறது. இதில் ஸ்ரேயாஸ் அய்யர் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். திருமணத்திற்காக 3வது டி.20ல் ஆடாத முகேஷ்குமாரும் அணிக்கு திரும்பி உள்ளார். கடைசி போட்டியில் பவுலிங்கில் 68 ரன்களை வாரி வழங்கிய பிரசித் கிருஷ்ணாவுக்கு நாளை கல்தா கொடுக்கப்படுகிறது. அவருக்கு பதிலாக முகேஷ்குமார் அல்லது தீபக்சாகர் சேர்க்கப்படுவர். பேட்டிங்கில் திலக் வர்மா இடத்தில் ஸ்ரேயாஸ் ஆடுவார் என தெரிகிறது.

மறுபுறம் ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல், ஸ்மித், ஆடம் ஜாம்பா நாடு திரும்பிவிட்ட நிலையில், இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். கடைசி போட்டியில் 222 ரன்னை வெற்றிகரமாக சேசிங் செய்ய உதவிய மேக்ஸ்வெல் இல்லாதது பின்னடைவாக இருக்கும். இருப்பினும் டிராவிஸ் ஹெட், டிம்டேவிட், ஜோஷ் பிலிப், பென் மெக்டெர்மாட், மத்தேயு ஷார்ட் உள்ளிட்ட அதிரடி வீரர்கள் உள்ளனர். இதனால் வெற்றியை தொடரும் முனைப்பில் ஆஸி. களம் இறங்கும். நாளை இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கி நடைபெற உள்ளது. இரு அணிகளும் நாளை 30வது முறையாக டி.20 போட்டியில் மோத உள்ளன. இதற்கு முன் மோதிய 29 போட்டியில் 17ல் இந்தியாவும், 11ல் ஆஸ்திரேலியாவும் வென்றுள்ளன. ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது.

ராய்ப்பூரில் முதல் டி.20 போட்டி: சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் முதன்முறையாக சர்வதேச டி.20 போட்டி நடைபெற உள்ளது. இதற்கு முன் இங்கு கடந்த ஜனவரி 21ம் தேதி ஒரே ஒரு ஒருநாள் போட்டி நடந்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான அந்த போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *