ராஜினாமா: `கெளதமியை கைவிட்டதா பாஜக?’ – மோசடி குற்றச்சாட்டும் பின்னணியும்

திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூர் பகுதியில் தனக்கு சொந்தமாக உள்ள 8.16 ஏக்கர் நிலத்தை விற்று தருமாறு குடும்ப நண்பரான அழகப்பனிடம் நடிகை கௌதமி கேட்டுள்ளார். இதனை அடுத்து அழகப்பனின் பரிந்துரையின் பேரில் அண்ணாநகரை சேர்ந்த தொழிலதிபர் பலராம், செங்கல்பட்டு மகேந்திராசிட்டி பகுதியை சேர்ந்த ரகுநாதன் ஆகியோருக்கு கடந்த 2015-ம் ஆண்டு பொது ஆவணம் எழுதி தந்துள்ளார். பின்னர் அந்த இடம் தனியார் நிறுவனத்துக்கு விற்கப்பட்டு, கெளதமிக்கு 4.10 கோடி ரூபாய் 2 தவணையாக கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த நிலம் 11.37 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு, தான் ஏமாற்றப்பட்டது கெளதமிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தெரிய வந்திருக்கிறது. அதேபோல ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ராமநாதபுரத்திலும் கெளதமிக்கு சொந்தமாக இருந்த நிலங்கள் மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கெளதமி புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் அழகப்பன், அவரது மனைவி, மகன், மருமகள் உட்பட 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கௌதமி, அழகப்பன்

6 பேரின் முன் ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி ஆன நிலையில், 6 பேரும் தலைமறைவாக உள்ளனர். இந்நிலையில் அழகப்பனை பா.ஜ.க-வை சேர்ந்த சிலர் காப்பாற்ற முயல்வதாகக் குற்றம்சாட்டி அக்கட்சியில் இருந்து விலகியிருக்கிறார் நடிகை கெளதமி. 25 ஆண்டுகளாக பா.ஜ.க-வில் இருந்த நடிகை கெளதமியின் இந்த திடீர் விலகல் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் நேற்று முந்தினம் (23.10.2023) செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. “அழகப்பன் என்பவர் சில மத்திய அமைச்சர்களுடன் புகைப்படம் எடுத்திருக்கிறார், அவர் ஒரு அறக்கட்டளையை சார்ந்து இருக்கிறார் என்பதெல்லாம் தனிப்பட்ட கருத்து. அதில் கட்சி தலையிடாது. புகாரில் முகாந்திரம் இருந்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த நபருக்கும் பா.ஜ.க-வுக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. கெளதமி இன்னும் என்னோடு தொடர்பில்தான் இருக்கிறார். இந்த புகாரை கெளதமி என்னிடம் சொன்னவுடன் நானே உயரதிகாரியிடம் பேசி, நேரம் வாங்கிக்கொடுத்து சந்திக்க வைத்தேன். ஆனால் இந்த வழக்கில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காதது எனக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அவர் பா.ஜ.க-வில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இவ்விவகாரத்தில் அவருக்கு ஆதரவாகவே இருப்போம்” என்று கூறியுள்ளார்.

அண்ணாமலையின் இந்த கருத்து குறித்து நடிகை கெளதமிக்கு நெருக்கமானவர்கள் சிலரிடம் விசாரித்தபோது, “நேற்று கட்சிக்கு வந்து இன்று பதிவி கேட்பவர் அல்ல கெளதமி. பிரதமர் மோடியின் மீது அதீத பற்று கொண்டவர், பல மேடைகளில் மோடி ஆட்சியின் சாதனைகளை விளக்கிப் பேசியிருப்பவர். அவருக்கு ஒரு பிரச்னை என்று வரும்போது, கட்சி உடன் நின்றிருக்க வேண்டாமா? அழகப்பன் கட்சியில் இல்லவே இல்லை என்கிறார்கள், பிறகு ஏன் அவரைக் காப்பாற்றத் துடிக்கிறார்கள்? பா.ஜ.க-வில் இல்லாத ஒருவர் பா.ஜ.க நிர்வாகிகளோடு அரசியல் ரீதியாக எப்படி நெருக்கமாக இருப்பார்? கெளதமிக்கு ஆதரவாக இருப்போம், கெளதமி கட்சியை விட்டு விலகியதில் வருத்தம் என்று சொல்கிறார்கள். ஆனால் அழகப்பனை ஒரு வார்த்தை கூட கண்டிக்க இதுவரை யாருக்கும் மனம் வரவில்லையே! இதிலிருந்தே தெரியவில்லையா? அவர்கள் யார் பக்கம் நிற்கிறார்கள் என்று?” என்கின்றனர்.

அண்ணாமலை

கெளதமி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், “கெளதமியின் பிரச்னையை பேசி தீர்த்து வைத்திருக்கலாம். ஏன் தீர்க்கப்படவில்லை எனத் தெரியவில்லை. எனக்கு அவரின் பிரச்னையே தெரியவில்லை. எனக்குத் தெரிந்திருந்தால் உதவியிருப்பேன்” என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பா.ஜ.க நிர்வாகிகளிடம் கேட்டபோது, “கெளதமி ஏமாற்றப்பட்டிருக்கிறார் என்றால் அது உண்மையிலேயே வருந்தத்தக்கது. ஆனால் அதற்கு பா.ஜ.க என்ன நடவடிக்கை எடுக்க முடியும்? உண்மையிலேயே கட்சியில் இல்லாத ஒருவரை இல்லை என்றுதானே சொல்ல முடியும்? பா.ஜ.க-வில் அவர் இருந்தால்தானே கட்சி ரீதியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும்? காவல்துறைதான் சட்டப்படி செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர முடியும். கட்சியை விட்டு போவதற்கு கொள்கை, கோட்பாடுகள் என்று எதாவது வலுவான காரணம் இருந்தால் பரவாயில்லை. தனிப்பட்ட பிரச்னைக்காக கட்சியை விட்டு போகிறேன் என்று சொல்கிறார். அவர் ஆக்டிவ் அரசியலில் எப்போதுமே இருந்ததில்லை.” என்கின்றனர்.

.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *