ரத்த சோகை கர்ப்பத்தை பாதிக்குமா..? இதன் பாதிப்புகளை தெரிந்துகொள்ளுங்கள்..!

மோனிகா துபாயில் நர்ஸாக பணி புரிந்தவர். இப்போது திருமணம் ஆகி இந்தியாவில் இருக்கிறார். தன்னுடைய முதல் கர்ப்பத்தில் இருக்கிறார். அன்று காலையில் மருத்துவமனைக்கு வந்திருந்தார். முகம் குழம்பியிருந்தது.

“என்ன! மோனிகா சிஸ்டர்! எப்படி இருக்கீங்க? என்று நலம் விசாரித்தேன்.

“நல்லா இருக்கேன்.. டாக்டர்! காலையிலிருந்து கொஞ்சம் கை மூட்டு வலியா இருக்கு. கல்ஃப்ல ஒர்க் பண்றப்ப நிறைய ப்ரெக்னன்ட் லேடீஸ்க்கு சிக்கல் செல் அனீமியா வால கை கால் ஜாய்ன்ட் எல்லாம் வீங்கி , வலில துடிக்கிறத பார்த்திருக்கேன். எனக்கும் அது மாதிரி ஏதாவது பிரச்சனை இருக்குமோனு பயமா இருக்கு “என்று கூறினார்.

என்னுடைய ஆலோசனை :

ஹீமோகுளோபின்( Hb) என்ற வார்த்தையை நாம் அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். ஹீமோகுளோபினை தாங்கி இருக்கும் செல்களை ரத்த சிவப்பணுக்கள் என்று அழைப்போம். இவற்றின் அமைப்பு புரிந்து கொள்வதற்காக சொல்வதென்றால் ,ஒரு ஊத்தப்பம் போன்று இருக்கும். இந்த ஹீமோகுளோபின் தான் ஆக்சிஜனை நம் உடலின் எல்லா உறுப்புகளுக்கும் எடுத்துச் செல்கிறது.

இந்த ஹீமோகுளோபினில் பல வகை இருக்கும் . பொதுவாக எல்லோருக்கும் இருப்பது எச்பி ஏ ( Hb A)என்ற வகையாகும் இது அடல்ட் பெரியவர்களுக்குரிய ஹீமோகுளோபின் என்பதை குறிக்கும். ( Adult). குழந்தை கருவாக தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது (F- fetal) வேறு வகை இருக்கும். இது தவிர வேறு சில அரிய வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இந்த ஹெச்பிஎஸ்( HbS) எனப்படும் சிக்கில் செல் ஹீமோகுளோபின் ஆகும்.

இந்த HbS அதிகமாக இருக்கும் போது சிவப்பு அணுக்களின் வடிவம் அரிவாளை போல வளைவாக மாறிவிடும். அத்துடன் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவும் குறைந்துவிடும். ஆக்சிஜனை எடுத்துச் செல்லக்கூடிய திறனும் குறைவதால் அவர்களுக்கு ரத்தசோகை உண்டாகிறது. இதை சிக்கல் செல் அனீமியா என்று கூறுவோம்.

இது மட்டுமல்லாது , செல்களுடைய வடிவம் அரிவாள் போல இருப்பதால் சிறு இரத்த குழாய்களின் வழியாக செல்லும் போது சில சமயங்களில் இந்த செல்கள் ஒன்றுடன் ஒன்று மாட்டிக் கொண்டு மொத்தமாக ஒரே இடத்தில் சேர்ந்து ரத்த ஓட்டத்தையே அடைத்து விடும். அப்போது குறிப்பிட்ட பகுதிக்கு ரத்தம் செல்லாததால் அந்த இடம் வீங்கி கடுமையான வலியை உண்டாக்கும். கர்ப்ப காலத்தில் இதுபோன்று ஒரே நேரத்தில் பல மூட்டுகள் பாதிக்கப்படலாம். இதை சிக்கில் செல் கிரைசிஸ் ( sickle cell crisis) என்று கூறுவோம் .

இது போன்ற நோய்கள் மரபியல் ரீதியாக குழந்தைக்கும் வருவதற்கு வாய்ப்பு இருக்கும் மற்றும் தாய்க்கு ரத்தத்தின் அளவு மிகவும் குறைவாகி இரத்தசோகை ஏற்படும் என்பதால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படலாம். கர்ப்ப காலத்தில் ஏராளமான நோய் தொற்றுகள்( infections) சிறுநீர் பாதை தொற்று , கருச்சிதைவு மற்றும் குறை பிரசவம் சிறிய குழந்தை ,எடை குறைவான குழந்தை, கருப்பைக்குள்ளேயே வளர்ச்சியின்மை போன்ற பிரச்சனைகள் குழந்தைக்கு ஏற்படலாம்.

பொதுவாக மாறுபட்ட ஹீமோகுளோபின் தொடர்பான நோய்கள் மரபணு சார்ந்த நோய்களாதலால் பரம்பரையாக வரும். குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவர்களுக்கு மத்திய தரை கடல் பகுதியில் உள்ள நாடுகளில் இந்த நோய் பரவலாக காணப்படுகிறது. இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளில் அந்த அளவிற்கு சிக்கில் செல் பாதிப்பு காணப்படுவதில்லை.

இதற்குரிய பரிசோதனையான ஹீமோகுளோபின் எலக்ட்ரோ ஃபோரஸிஸ் ( haemoglobin electrophoresis) செய்யும்பொழுது இந்த ஹீமோகுளோபின் S தனியாக பிரித்து எந்த சதவீதத்திற்கு அது ரத்தத்தில் காணப்படுகிறது என்பதை கண்டுபிடிக்கலாம்.

எனவே ” மோனிகா!! உங்களுக்கு மிகவும் பயமாக இருப்பதால் நாம் இந்த பரிசோதனையும் செய்து பார்க்கலாம். கர்ப்ப காலத்தில் ஏற்படும் லேசான மூட்டு வலியை கூட சிக்கில் செல் பிரச்சனையாக இருக்குமோ? என்று பயத்தால் பார்க்கிறீர்கள் . உங்களுடைய முதல் கர்ப்பத்தை நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் நல்ல நேர்மறையான எண்ணங்களுடனும் எதிர்கொள்ளுங்கள்” என்று கூறினேன்.

இப்போது மோனிகாவின் முகம் தெளிவாக இருந்தது. ” நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட்!! நன்றாக புரிந்தது !!! எனக்கு நிம்மதியாக இருக்கிறது.” என்றார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *