முன்னணி அணிகளை விரட்டிய அதிர்ச்சி அணிகள் மோதல்

லக்னோ: நடப்பு சாம்பியன் உட்பட முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி தோல்விகளை பரிசாக தந்த ஆப்கானிஸ்தான்-நெதர்லாந்து அணிகள் இன்று 34வது லீக் ஆட்டத்தில் களம் காண உள்ளன. அதில் ஆப்கான் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பிரகாசமாக வைத்துள்ளது. அந்த அணி இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களில் தலா 3 ஆட்டங்களில் வெற்றி, தோல்வியை பெற்றுள்ளது. அதன் மூலம் புள்ளிப்பட்டியலில் ஆப்கான் 6 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருக்கிறது. ரன் ரேட் அடிப்படையில் 5வது இடத்ததில் உள்ள பாகிஸ்தானோ 7 ஆட்டங்களில் ஆடி அதே 6 புள்ளிகளுடன் உள்ளது.

ஆப்கான் இதுவரை வங்கதேசம், இந்தியா, நியூசிலாந்து அணிகளிடம் மட்டுமே தோல்வியை தழுவியது. அதன் பிறகு நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன்கள் பாகிஸ்தான், இலங்கை அணிகளை சாய்த்துள்ளது. அதனால் அசமத்துல்லா சாகிதி தலைமையிலான ஆப்கான் அணி இன்று வெற்றிப் பெற்றால் அரையிறுதி வாய்ப்பை மேலும் பிரகாசமாக்கும். எஞ்சிய 2 ஆட்டங்களில் முன்னாள் சாம்பியன் ஆஸி, தெ.ஆப்ரிக்கா அணிகளை வீழ்த்த வேண்டும்.

அதே நேரத்தில் மற்ற அணிகளின் வெற்றித் தோல்விகளும் ஆப்கானின் அரையிறுதி வாய்ப்பை முடிவுச் செய்யும். அதே நிலைமையில்தான் நெதர்லாந்து அணியும் உள்ளது. அந்த அணி இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களில் 4 தோல்வி, 2வெற்றிகளை வசப்படுத்தி உள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளிடம் படுத்தோல்வியை சந்தித்தாலும், வலுவான தென் ஆப்ரிக்கா, வங்கதேச அணிகளை பெரும் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது.

அதனால் ஸ்காட் எட்வர்டு தலைமையிலான நெதர்லாந்து அணி இன்றைய ஆட்டத்தில் ஆப்கானுக்கும் அதிர்ச்சி தோல்வியை தந்தாலும் ஆச்சர்யம் ஏற்படாது. அதே நேரத்தில் இன்று மட்டுமல்ல, இனி வரும் ஆட்டங்களில் இங்கிலாந்து, இந்திய அணிகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. அந்த ஆட்டங்களிலும் அதிர்ச்சி வெற்றி பெற்றாலும், ஆப்கானை போலவே மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை பொறுத்து தான் நெதர்லாந்துக்கு அரையிறுதி வாய்ப்பு முடிவாகும்.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *