முதலமைச்சர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டலா…? போதை ஆசாமி கைது – முழு பின்னணி

Tamil Nadu Latest: நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள தாம்பட்டி அண்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் கணேசன் (41). இவருக்கு திருமணம் ஆகி 5 மாதத்திலேயே மனைவி உயிரிழந்த நிலையில், இவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

என்ன பிரச்னை?

இந்நிலையில் கிராமப் பகுதியில் கூலி வேலை செய்து வரும் கணேசன் நாள்தோறும் மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவர் மது போதையில் 108 ஆம்புலன்ஸ் அவசர சேவை மையத்திற்கு அழைத்து தனக்கு உடல்நிலை சரியில்லை தன்னை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு மது போதையில் தொடர்பு கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

போதையில் மிரட்டல்?

அதேபோல் நேற்று மாலை (நவ. 4) தனக்கு உடல்நிலை சரியில்லை தன்னை ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறிய போது ஆம்புலன்ஸ் வாகனம் அனுப்ப தாமதமானதால் மீண்டும் கட்டுப்பாட்டு மையத்திற்கு அவர் அழைத்துள்ளார். அதில், தமிழக முதலமைச்சரின் இல்லத்திற்கு வெடிகுண்டு வைத்தாலும் இப்படிதான் செயல்படுவீர்களா என கூறி உதகையில் உள்ள தாம்பட்டி கிராமத்தை சுற்றி 7 இடங்களில் வெடிகுண்டுகளை வைத்துள்ளதாக 108 அவசர சேவை மையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் என கூறப்படுகிறது.

காவல்துறை உடனடி விசாரணை

உடனடியாக அவசர சேவை மையத்தில் இருந்து சென்னை தலைமை காவல்துறை கட்டுப்பாட்டு மையத்திற்கு புகார் அளித்ததன் அடிப்படையில் நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் தொலைபேசி எண்ணை வைத்து காவல்துறை சார்பில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து உதகை அருகே உள்ள தாம்பட்டி அண்ணா நகர் பகுதியில் வசித்து வரும் கணேசன் என்பது தெரியவந்துள்ளது.

புரளி என தகவல்

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் கணேசனை கைது செய்து வழக்கு பதிவு செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் உதகையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், அவர் வெடிகுண்டு வைக்கவில்லை என்றும் அது வெறும் புரளி என்றும் தகவல்கள் கூறப்படுகின்றன. சென்னை ஆளுநர் மாளிகையில் சமீபத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தமிழ்நாடு அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே, இந்த போதை ஆசாமியின் மிரட்டல் உதகையில் சற்று பரபரப்பை உண்டாக்கியது. மேலும், இதில் போலீசார் விரைந்து செயல்பட்டு அந்த போதை ஆசாமியை கைது செய்தது பலராலும் பாராட்டப்பட்டது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *