மீண்டும் வருகிறதா ஆன்லைன் ரம்மி… உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன?

Online Rummy Case Issue: ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு விசாரித்தது.

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் வாதம்

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் இந்த வழக்கில்,”வெறும் யூகங்களின் அடிப்படையில், எந்த உண்மை தகவல்களும் இல்லாமல் இந்த தடை சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்பதால் இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மொத்த தொகையில், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் 16 சதவீதம் மட்டுமே கட்டணமாக பெறுகின்றன. ஆன்லைன் நிறுவனங்களின் தொழில் செய்யும் உரிமையை பாதிக்கச் செய்யும் வகையில் உள்ள இந்த சட்டம், அரசியல் சட்டத்துக்கு விரோதமானது.

ஆன்லைன் விளையாட்டுகளின் தீமைகள் குறித்த எச்சரிக்கை அம்சங்களோடுதான் விளையாட்டுகள் வழங்கப்படுவதாகவும், அடிமையாவதை தடுப்பதற்கான சோதனைகள் உள்ளன. திறமையை நம்பி பந்தயம் வைத்து விளையாடும் விளையாட்டு, சூதாட்டமாகாது. ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்தலாமே தவிர, தடை விதிக்க முடியாது. ஒரே செயலை ஆன்லைனில் மேற்கொள்வது சட்டவிரோதம் எனவும், நேரில் மேற்கொள்வது சட்டப்படியானது எனவும் வகைப்படுத்த முடியாது” என வாதிட்டன.

அரசு தரப்பு வாதம்

இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள்,”ரம்மி திறமைக்கான விளையாட்டாக இருந்தாலும், அதை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டாக மாற்றும் சூழ்நிலைகளும் உள்ளதாகவும், பல தற்கொலை நிகழ்வுகளை தொடர்ந்தே இச்சட்டம் கொண்டு வரப்பட்டது.

ஆன்லைன் ரம்மிக்கு மட்டுமல்லாமல், அனைத்து ஆன்லைன் விளையாட்டுக்களுக்கும் தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும் இதற்கு முன் கொண்டு வரப்பட்ட சட்டத்தை எதிர்த்த வழக்கில், ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதித்து மாநில அரசு சட்டம் இயற்றும் அதிகாரத்தை சென்னை உயர் நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.

ரூ. 900 கோடி மேல் லாபம்

பொதுமக்களுக்கு அநீதி இழைக்கும் ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆன்லைன் விளையாட்டுக்களால், 76 சதவீத குழந்தைகள், கண்பார்வை பாதிப்பு, படிப்பு பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் பாதிக்கப்படுகின்றனர்.

கடந்தாண்டு மட்டும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் 900 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டியுள்ளதாகவும் போன்ஸ் போன்ற கவர்ச்சி அறிவிப்புகளால் அடிமையாக்கி, சட்டம் ஒழுங்கு பிரச்னையை உருவாக்கி பொது ஒழுங்கை பாதிக்கச் செய்கிறது என, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அறிக்கை அளித்துள்ளார். ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் செயல்படுவதால் அவற்றை கண்காணிக்க முடியாது; இந்நிறுவனங்களை ஒழுங்குபடுத்த இயலாது என்பதால் முழு தடை விதிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தது.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி, இந்த வழக்குகளின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்குகளில் தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து நிறைவேற்றப்பட்ட சட்டம் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற மனுதாரர் நிறுவனங்களின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.

அதிர்ஷ்டத்துக்கான ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்தது செல்லும் என தீர்ப்பளித்த நீதிபதிகள், திறமைக்கான ஆன்லைன் விளையாட்டுக்களான ரம்மி, போக்கர் விளையாட்டுக்களை தடை செய்த பிரிவுகளை ரத்து செய்து தீர்ப்பளித்தனர். ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுக்களை விளையாடுவதற்கான வயது, நேரம் உள்ளிட்டவை தொடர்பாக அரசு  விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம் என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *