மிசோரம்: ஆட்சியை பறிகொடுத்த பாஜக கூட்டணி கட்சி எம்.என்.எஃப்- புதிய ஆட்சி அமைக்கும் இசட்பிஎம்!

 

ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் தொங்கு சட்டசபைதான் அமையும் என்கிற அத்தனை தேர்தல் கருத்து கணிப்புகளையும் தவிடு பொடியாக்கி ஜோரம் மக்கள் இயக்கம் (Zoram People’s Movement ZPM) 26 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சி அமைக்கிறது.

மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 21 இடங்கள். மிசோரமில் பாஜகவின் கூட்டணி கட்சியாக மிசோ தேசிய முன்னணி (Mizo National Front – MNF) ஆட்சி முதல்வர் ஜோரம்தங்கா தலைமையில் நடைபெற்றது.

மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் தொடர்பான அனைத்து கருத்து கணிப்புகளுமே தொங்கு சட்டசபைதான் அமையும். ஆளும் எம்.என்.எஃப் மற்றும் ஜோரம் மக்கள் இயக்கம் ஆகியவை அதிகமான இடங்களைக் கைப்பற்றும். காங்கிரஸ் அல்லது பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சியைத்தான் அமைக்கும் என அடித்து கூறின.

தேர்தல் களத்தில் பாஜகவிடம் இருந்து ஆளும் எம்.என்.எஃப் விலகியே நின்றது. இத்தனைக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, வடகிழக்கு கூட்டணி ஆகியவற்றில் எம்.என்.எஃப் இடம் பெற்றிருக்கிறது. மிசோரம் மாநில மக்களும் மணிப்பூரின் குக்கி இன பழங்குடிகளும் தொப்புள் கொடி உறவானவர்கள். மணிப்பூரில் குக்கி இன மக்கள், மைத்தேயி மக்களால் ஒடுக்கப்பட்டு படுகொலைக்குள்ளான போது மத்திய பாஜக அரசு கண்டு கொள்ளவும் இல்லை- மணிப்பூர் வன்முறையை ஒடுக்கவும் இல்லை. இந்த கோபம் மிசோரம் மாநில தேர்தல் களத்திலும் எதிரொலித்தது. அதனால் பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க முடியாது என முதல்வர் ஜோரம் தங்கா அறிவித்திருந்தார்.

மிசோரம் சட்டசபை தேர்தல் முடிவுகள் காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் மிசோரம் தேர்தலில் ஜோரம் மக்கள் இயக்கம் 9 இடங்களில் வெற்றி பெற்றுவிட்டது. 17 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பெரும்பான்மைக்கு தேவையான் 21 இடங்களை எளிதாக கடந்து கொண்டிருக்கிறது ஜோரம் மக்கள் இயக்கம். இதனால் ஜோரம் மக்கள் இயக்கம் புதிய ஆட்சியை அமைப்பது உறுதியாகி உள்ளது.

அதேநேரத்தில் கருத்து கணிப்புகள் கணித்தபடியே மிசோ தேசிய முன்னணி 1 இடத்தில் வென்றுள்ளது. 10 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியானது 1 இடத்தில்தான் முன்னிலை வகிக்கிறது. பாஜக 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மிசோரமில் காங்கிரஸ் கணிசமான இடங்களைக் கைப்பற்றும் என கருத்து கணிப்புகள் தெரிவித்திருந்தன.

மிசோரமில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவை 11- இதில் ஜோரம் மக்கள் இயக்கம் 9 இடங்களிலும் எம்.என்.எஃப் 1, பாஜக 1 இடத்திலும் வென்றுள்ளன. ஜோரம் மக்கள் இயக்கம் 17, எம்.என்.எஃப், 10, பாஜக 1, காங்கிரஸ் 1 இடத்தில் முன்னணி வகிக்கிறது.


Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *