மிக்ஜாங் புயல்; சென்னை மெரீனா மூடல்.. பொதுமக்களுக்கு அனுமதியில்லை

வங்க கடலில் நிலை கொண்டிருக்கும் மிக்ஜாம் புயல் தமிழகத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் நெருங்கும்போது தரைக்காற்று சுமார் 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இப்போதே அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்படுகின்றன. இதனால் மெரீனா, பட்டினப்பாக்கம், பெசண்ட் நகர் கடற்கரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு வரும் மக்கள் அனைவரையும் தடுக்கும் காவல்துறையினர், ஒலிப்பெருக்கி மூலம் காரணத்தை கூறி அவர்களை திருப்பி அனுப்பி வைக்கின்றனர்.

சென்னையில் மெரீனாவில் ஏற்கனவே கடல் அலைகளை ரசிக்கவும் புகைப்படவும் எடுக்கவும் குழுமியிருந்த மக்களை வானொலி மூலம் எச்சரித்த காவல்துறை உடனடியாக கடற்கரை பகுதியில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியது. மேலும் புதியவர்கள் கடற்கரைக்கு வராத வண்ணம் பீச்சுக்கு செல்லும் அனைத்து வழிகளையும் தடுப்புகளை கொண்டு சென்னை மாநகர் காவல்துறை அடைத்தது. பெசண்ட் நகர் கடற்கரையிலும் பீச்சுக்கு செல்லும் பாதையில் காவல்துறையினர் தடுப்புகளை வைத்து அடைத்துள்ளனர். மிக்ஜாம் புயல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் காற்றும் பலமாக வீசிக் கொண்டிருக்கிறது.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழையும் பெய்து வருகிறது. இதன் வேகம் இன்னும் சில மணி நேரங்களில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயலைப் பொறுத்தவரை 5 ஆம் தேதி தான் முழுமையாக கரையைக் கடக்க இருக்கிறது. நெல்லூருக்கும் மசூலிப்பட்டனத்திற்கும் இடையே 110 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடக்க உள்ளது.

இதனால், தமிழகத்தில் அநேக இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும்,  ஓரிரு இடங்களில் அதி கனமழையும், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

அத்துடன் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை,  செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *