மனுக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை கொளத்தூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்து கொண்டு பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘என்னை தேர்ந்தெடுத்த கொளத்தூர் தொகுதிக்கு ஒவ்வொரு முறை வரும்போதும் புத்துணர்ச்சி பெறுகிறேன். 10 நாட்களுக்கு ஒருமுறை கொளத்தூர் தொகுதிக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளேன்.

சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றபோது, எங்களுக்காக வாக்களித்த மக்கள் சரியான நபரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று சொல்லும் வகையில் பணியாற்றுவோம் என்று கூறியிருந்தேன். அதே போல், எங்களுக்கு வாக்களிக்காத மக்களும் மகிழ்ச்சி அடையும் வகையில் எங்கள் பணி அமையும் என்று நான் தெரிவித்தேன். அது தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

 உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் 1896 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதால் அவற்றின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. தேர்தல் நேரத்தில் அறிவித்த பல திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படுகிறது.

அறிவித்த நாளுக்கு ஒரு நாள் முன்பே பயனாளிகள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ், தனது தொகுதியில் 3 முக்கிய பணிகள் நிறைவேற்றப்பட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனே நன்றி கூறியுள்ளார். கட்சி மற்றும் அரசியல் பாகுபாடின்றி மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *