மணிப்பூர் போலீஸ் அதிகாரி படுகொலை- தமிழர் வாழும் மோரே நகரில் பெரும் பதற்றம்- 42 பேர் அதிரடி கைது!

இம்பால்: மணிப்பூரில் போலீஸ் அதிகாரி சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தமிழர்கள் அதிகம் வாழும் மோரே நகரில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் மொத்தம் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மணிப்பூரில் குக்கி- மைத்தேயி இனக்குழுக்களிடையேயான மோதல் 7 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த மோதல் இன்னமும் கட்டுப்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில் மணிப்பூரின் மோரே நகரம்- மியான்மர் எல்லையில் உள்ளது. இங்கு பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் குக்கி இனக்குழுவினர் பெரும்பான்மையினராகவும் உள்ளனர்.

மோரே நகரில் நேற்று முன் தினம் திடீரென ஆயுதம் தாங்கிய குக்கி இனக்குழுவினர் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு மூத்த போலீஸ் அதிகாரி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அங்கு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மணிப்பூர் மோரே நகரில் தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. இதில் மொத்தம் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 32 பேர் மியான்மர் நாட்டவர். இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகவும் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இம்பாலில் தாக்குதல்: இதனிடையே மணிப்பூர் தலைநகர் இம்பாலில், முதல்வர் பங்களா மற்றும் ராஜ்பவன் அருகே காவல்நிலையத்துக்குள் ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று நுழைய முயற்சித்தது. அப்போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி அந்த கும்பலை கலைத்தனர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *