புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அன்னவாசல் மற்றும் விராலிமலை ஆகிய பகுதிகளில் உள்ள திமுகவைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணையும் விழா காலாடி பட்டியில் நடைபெற்றது. திமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த நிர்வாகிகளுக்கு விஜயபாஸ்கர் பொன்னாடை போர்த்தி வரவேற்று அவர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், திமுக மீது மக்கள் மத்தியில் அவர்களுக்கு மிகப்பெரிய அதிருப்தி ஏற்பட்டு விட்டது.
அந்த அதிருப்தி வாக்குச்சாவடிகளில் போய் சென்றடையும். எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக அடுத்து ஆட்சி அமைக்கப் போவது உறுதி. இதனால்தான் திமுகவிலிருந்து விலகி தற்போது அதிமுகவில் பலர் சேர்ந்து வருகின்றனர். திமுக ஆட்சியில் எல்லா தரப்பும் அதிருப்தியில் உள்ளனர். இந்தியாவிலேயே தமிழக சுகாதாரத்துறை முன்னோடி மாநிலமாக இருந்தது. ஆனால் இன்றைக்கு சுகாதாரத்துறை மிகக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தால் ப்ளூ காய்ச்சல் அதிகரித்து வருகிறது.
தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு படுக்கைகள் இல்லை. அதேபோன்று காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்காக டாமிங் ஃப்ளூ மாத்திரை தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் வருடத்திற்கு 4000 மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்பட்டன. திமுக ஆட்சி பொறுப்பேற்று மூன்று ஆண்டு காலம் ஆகியும் ஒரு மருத்துவ பணியிடங்கள் கூட நிரப்பப்படவில்லை. நீதிமன்றத்தில் உள்ள வழக்கை காரணம் காட்டி மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. கடந்த கால ஆட்சியை குறை கூறுவதை விட்டுவிட்டு திமுக ஆட்சி காலத்தில் செய்த சாதனை என்ன என்பதை சுகாதாரத்துறை அமைச்சர் விளக்க வேண்டும்.
தமிழக முழுவதும் 50 முதல் 40 சுகாதாரப் பணியிடங்கள் காலியாக உள்ளது இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தை திறனற்ற முறையில் கையாண்டதால் சுகாதாரத்துறை கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக நான் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்துள்ளேன் என்னுடைய வார்த்தைகளை குற்றச்சாட்டாக எடுத்துக் கொள்ளாமல் ஆலோசனையாக எடுத்துக் கொண்டு சுகாதாரத் துறையை மேம்படுத்த வேண்டும்” என்றார்.