போலி ஆவணங்களுடன் ஆக்கிரமித்துள்ள கடைகள் அனுமதி 558; ஆக்கிரமிப்பு 1500 ; பாயுமா மாநகராட்சி கமிஷனரின் கறார் நடவடிக்கை

மதுரை :: மதுரை மாநகராட்சி ரோட்டோரங்களில் ஆயிரக்கணக்கான கடைகள் அனுமதி பெறாமல் போலி ஆவணங்களுடன் மின் இணைப்பு பெற்றும், அனுமதி பெற்ற கடைகள் பல மடங்கு இடங்களை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

மதுரை மாநகராட்சியும், ஆக்கிரமிப்பும் ஒட்டிப்பிறந்த ‘இரட்டை குழந்தைகளாய்’ காட்சியளிப்பது தொடர் கதையாகி வருகிறது. பழங்காநத்தம் பைபாஸ் ரோடே இதற்கு முதல் சாட்சி. ஆக்கிரமிப்பாளர்களுக்கு அரசியல் பிரமுகர்கள், கவுன்சிலர்கள், அதிகாரிகள் என ‘முப்பெரும் ஆசி’ உள்ளதால் எத்தனை ‘நேர்மை’ கமிஷனர்கள் வந்தாலும் தீர்வுகாண்பதில் தடுமாறுகின்றனர். விளைவு போக்குவரத்து நெரிசல், விபத்துக்கள், மக்களை இம்சிப்பது என தொடர்கிறது.

அக்.19ல் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர் விஜயசவுமி, ‘மாட்டுத்தாவணி பூ மார்க்கெட், மீன் மார்க்கெட்டில் டூவீலர்கள், கார்களுக்கு அனுமதி பெறாத பலர் தினமும் ரூ.பல ஆயிரம் நுழைவு கட்டணம் வசூலிக்கின்றனர். மாநகராட்சிக்கு இழப்பு ஏற்படுகிறது’ என, குற்றம்சாட்டினார். அதே கூட்டத்தில் காங்., கவுன்சிலர் கார்த்திகேயன், ‘மாநகராட்சி ‘எக்கோ பார்க்’கில் பராமரிப்பு மேற்கொள்ள வேண்டியுள்ளது என, நடைப் பயிற்சியாளர்களிடம் ஒரு அமைப்பு மாதம் ரூ.ஆயிரம் வசூலிப்பதாக’ பகீர் குற்றச்சாட்டை தெரிவித்தார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது மேயர், கமிஷனருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். இது தான் மாநகராட்சியின் நிலை.

போலி ஆவணங்களால் ஷாக்

இதன் தொடர்ச்சியாக ‘மாநகராட்சி அனுமதியின்றி ரோட்டோரம் உள்ள ஆயிரக்கணக்கான கடைகள் போலி ஆவணங்கள் மூலம் மின் இணைப்புகள் பெற்றுள்ளன’ என்ற பூதாகர தகவலும் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் சையதுபாபு கூறியதாவது: தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டதில் மாநகராட்சி அனுமதி பெற்ற ரோட்டோர பெட்டிக்கடைகள் 558 மட்டுமே. ஆனால் 100 வார்டுகளிலும் 1500க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இவற்றுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி அதிகாரிகள் போலி ஆவணங்கள் அளித்துள்ள கொடுமையும் கண்டுபிடிக்கப்பட்டது.

அனுமதி பெற்ற கடைகளும் பல மடங்கு இடங்களை ஆக்கிரமித்துள்ளன. அனுமதி பெற்றவர் ஒருவராகவும், அதனை தற்போது கடை நடத்துபவர் வேறு நபராகவும் உள்ளனர். ரூ.பல லட்சங்களில் கடைகள் வேறு நபருக்கு மாற்றப்பட்டுள்ளன. பலர் வாடகைக்கு விட்டுள்ளனர். 2015க்கு பின் கடைகள் உரிமம் புதுப்பிக்கப்படவில்லை. ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லை. 18 மாதங்களாக கடை வாடகை வசூலிக்கப்படவில்லை. இதுகுறித்து பல முறை புகார் அனுப்பியும் மாநகராட்சி நடவடிக்கை இல்லை. தற்போதைய கமிஷனர் மதுபாலனாவது விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »