பெங்களூருவில் இன்று கடைசி டி20; 4வது வெற்றிக்கு இந்தியா முனைப்பு: ஆறுதல் வெற்றி பெறுமா ஆஸி.?

பெங்களூரு: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி டி20 போட்டி, பெங்களூருவில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. உலக கோப்பை தொடர் முடிந்ததும், இந்தியா – ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்கியது. முதல் 2 ஆட்டங்களில் சூரியகுமார் தலைமையிலான இந்திய அணி முறையே 2 விக்கெட், 44 ரன் வித்தியாசத்தில் வென்று முன்னிலை பெற்றது. 3வது போட்டியில் மேத்யூ வேடு தலைமையிலான ஆஸி. 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ராய்பூரில் நேற்று முன்தினம் நடந்த 4வது போட்டியில் 20 ரன் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 3-1 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. இது ஆஸி.க்கு எதிராக இந்தியா கைப்பற்றும் 6வது டி20 தொடராகும். இந்நிலையில், 5வது மற்றும் கடைசி டி20 பெங்களூருவில் இன்று நடக்கிறது.

சம்பிரதாயமான இப்போட்டியில் வென்று ஆதிக்கத்தை தொடர இந்தியாவும், ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்ப ஆஸ்திரேலியாவும் வரிந்துகட்டுகின்றன. இந்தியா அடுத்து தென் ஆப்ரிக்கா சென்று விளையாட உள்ள நிலையில், ஆஸ்திரேலியா தனது சொந்த மண்ணில் பாகிஸ்தான் சவாலை சந்திக்கிறது. அந்த தொடர்களுக்கான பயிற்சி ஆட்டமாக இன்றைய கடைசி டி20 இருக்கும். இந்தியா ஏற்கனவே தொடரை கைப்பற்றிவிட்டதால், அணியில் நிறைய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடிய ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என்பதால், இன்றைய போட்டியில் ரன் மழை பொழிய அதிக வாய்ப்பு உள்ளது.

இந்தியா: சூரியகுமார் (கேப்டன்), ஷ்ரேயாஸ், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், தீபக் சஹார், ஷிவம் துபே, ருதுராஜ், இஷான், ஜெய்ஸ்வால், முகேஷ் குமார், அக்சர், பிரசித், பிஷ்னோய், ஜிதேஷ் ஷர்மா, ரிங்கு சிங், திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர்.

ஆஸ்திரேலியா: மேத்யூ வேடு (கேப்டன்), பெஹரண்டார்ப், டிம் டேவிட், பென் த்வார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், கிறிஸ் கிரீன், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், பென் மெக்டெர்மாட், ஜோஷ் பிலிப், கேன் ரிச்சர்ட்சன், தன்வீர் சங்கா, மேத்யூ ஷார்ட்.

* இரு அணிகளும் இதுவரை மோதிய 30 டி20 ஆட்டங்களில் இந்தியா 18-11 என முன்னிலை வகிக்கிறது (ஒரு ஆட்டம் ரத்து).
* இந்தியா கடைசியாக விளையாடிய 5 டி20ல் 4 வெற்றி, ஒரு தோல்வி கண்டுள்ளது.
* ஆஸி. கடைசியாக விளையாடிய 5 டி20ல் 2 வெற்றி, 3 தோல்வி கண்டுள்ளது.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *