புயல் பாதிப்பு… தமிழ்நாட்டுக்கு நிவாரண நிதி அறிவிப்பு – எவ்வளவு தெரியுமா?

Chennai Floods: மிக்ஜாம் புயலாலும், அதனால் ஏற்பட்ட மழை வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு நிவாரண நிதியை ஒதுக்கி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டார்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா (Amit Shah) வெளியிட்டுள்ள X பதிவில், “கடந்த எட்டு ஆண்டுகளில் சென்னையில் மூன்றாவது முறையாக பெரிய வெள்ளத்தை சென்னை எதிர்கொள்கிறது. பெருநகரங்களில் அதிக மழைப்பொழிவு ஏற்பட்டு, திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை அதிகம் பார்க்க முடிக்கிறது.

அந்த வகையில், முதல் நகர்ப்புற வெள்ள நிவாரண திட்டத்திற்கு (Urban Flood Mitigation Project) தேசிய பேரிடர் நிவாரண நிதியத்தின் (NDMF) கீழ், 561.29 கோடி மதிப்பிலான சென்னை பேசின் திட்டத்திற்கான ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள மேலாண்மை நடவடிக்கைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். இதில் மத்திய அரசின் (Central Government) பங்கு ரூ.500 கோடியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த நிவாரணத் திட்டம் சென்னையை, திடீர் வெள்ளத்திலும் தாங்கக்கூடியதாக மாற்ற உதவும். நகர்ப்புற வெள்ள நிவாரண முயற்சிகளில் இது முதன்மையானது மற்றும் நகர்ப்புற வெள்ள மேலாண்மைக்கான பரந்த கட்டமைப்பை உருவாக்க உதவும்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மற்றொரு X பதிவில்,”மிக்ஜாம் புயல் (Cyclone Michaung) தமிழகம் மற்றும் ஆந்திராவை கடுமையாக பாதித்துள்ளது. சேதத்தின் அளவு வேறுபட்டாலும், இந்த மாநிலங்களின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால், பயிர்களும் பாதிக்கப்படுகின்றன.

புயல் பாதித்த இடங்களுக்கு தேவையான நிவாரணங்களை அளிப்பதில் மாநில அரசுகளுக்கு உதவ, மாநில பேரிடர் நிவாரண நிதியின் 2ஆவது தவணையின் மத்திய அரசின் பங்கான ரூ.493.60 கோடியை ஆந்திராவுக்கும், ரூ.450 கோடியை தமிழகத்துக்கும் முன்கூட்டியே வழங்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார்.

இரு மாநிலங்களுக்கும் ஒரே தொகையின் முதல் தவணையை மத்திய அரசு ஏற்கனவே வழங்கியிருந்தது. பாதிக்கப்பட்ட அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். இந்த முக்கியமான நேரத்தில் நாங்கள் அவர்களுடன் நிற்கிறோம், விரைவில் நிலைமை சீரடைவதை உறுதி செய்வோம்” என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு ரூ.5,060 கோடியை இடைக்கால நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். தொடர்ந்து, அந்த கடிதத்தை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, பிரதமரிடம் அளித்தார். இதை தொடர்ந்து, மிக்ஜாம் புயல் மற்றும் மழை பாதிப்பு குறித்து பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுடன் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பேசினார்.

மேலும், மத்திய குழுவை புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அனுப்பும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று சென்னை வந்து ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொண்டார். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *