புதுச்சேரி அரசு துறைகளுக்கு மதிப்பீட்டு குழு… கிடுக்கிப்பிடி; உள்கட்டமைப்புக்கு செலவிட்டது ரூ. 49 கோடி மட்டுமே

புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருந்ததால், வெளியில் கடன் வாங்கி உட்கட்டமைப்பினை மேம்படுத்த அனுமதிக்கப்படவில்லை. கடந்த 2007ம் ஆண்டு புதுச்சேரிக்கென தனி கணக்கு ஆரம்பிக்கப்பட்ட பிறகு, வெளியில் கடன் வாங்க அனுமதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, நபார்டு, ஹட்கோ உள்பட பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி, மாநிலத்தில் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிதியாண்டு 300 கோடிக்கு கடன் அனுமதிக்கப்பட்டு இருந்த சூழ்நிலையில், இது குறித்த சட்டசபை மதிப்பீட்டு குழுவின் ஆய்வு கூட்டம் நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது.

சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார். மதிப்பீட்டு குழு தலைவர் நாஜிம், எம்.எல்.ஏ.க்கள் நேரு, ரமேஷ், ஆறுமுகம், பிரகாஷ்குமார், நாகதியாகராஜன், ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு, அரசு செயலர்கள், துறை இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முழு பட்ஜெட் தாக்கல் செய்துள்ள போதிலும் கடன்கள் மாநில வளர்ச்சிக்காக முழுமையாக பயன்படுத்திக்கொள்ளாதது குறித்து கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

இந்தாண்டு 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், ஒன்பது மாதங்களில் வெறும் 49.13 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.

இது குறித்து சராமரியாக அரசு செயலர்கள், துறை இயக்குனர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

பொதுப்பணித் துறைக்கு 154 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதில், அத்துறை மட்டுமே 49.13 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.

மற்ற அரசு துறைகள் அனைத்தும் ஒரு பைசா கூட செலவு செய்யாமல் உள்ளது குறித்தும் கடும் அதிருப்தியை மதிப்பீட்டு குழு வெளிப்படுத்தியது.

இன்னும் 3 மாதமே உள்ள சூழ்நிலையில் இவ்வளவு தொகை எப்படி செலவிடப்பட முடியும் என்று சரமாரியாக கேள்வியை எழுப்பியது.

மதிப்பீட்டு குழு தலைவர் நாஜிம் எம்.எல்.ஏ., பேசுகையில், ‘கடந்த பட்ஜெட்டில் 500 கோடி ஒதுக்கப்பட்டபோதும் சரியாக செலவிடப்படவில்லை. அதனால் இந்தாண்டு 300 கோடியாக பேரக்கடன் குறைக்கப்பட்டது.

பட்ஜெட் தாக்கல் செய்து 9 மாதங்கள் உருண்டோடியும் இந்த தொகையை மாநில வளர்ச்சிக்காக முழுமையாக செலவிடப்படவில்லை. அடுத்து திருத்திய பட்ஜெட் மதிப்பீடு ரெடியாக உள்ளது.

பேரக்கடன்கள் செலவிடாத சூழ்நிலையில் நிதித் துறை 300 கோடியை 250 கோடியாக குறைத்துவிடும்.

எனவே நான்கு பிராந்தியங்களில் உள்ள எம்.எல்.ஏ.க்களை கலந்து பேசி, பேரக்கடனை முழுமையாக உட்கட்ட மேம்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும்’ என்றர்.

இதற்கும், நான்கு பிராந்தியங்களில் உள்ள எம்.எல்.ஏ.க்களை கலந்து பேசி, பணிகளை விரைவுப்படுத்தலாம் என, உறுதியளித்தனர்.

தொடர்ந்து புதுச்சேரியில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

முழுமையாக செலவு செய்யாதது ஏன்?

நபார்டு உள்ளிட்ட வங்கிகளிடமிருந்து கடன் கிடைத்தும் கூட திட்ட அறிக்கை,டெண்டர் விடுவது,டெண்டரை இறுதி செய்வதில் பல மாதங்கள் உருண்டோடி விடுகிறது. இதன் காரணமாக விரைவாக செலவு செய்யப்படுவதில்லை.அப்படியே விரைவாக கோப்பு சென்றாலும் கூட சில நேரங்களில் அரசு செயலர்கள், இயக்குனர்கள் கேள்வி மேல்கேள்வி கேட்டு கோப்புகளை திருப்பி அனுப்பி விடுகின்றனர். இதன் காரணமாகவே, கட தொகை முழுமையாக செலவிடப்படுவில்லை.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *