புதுச்சேரியில் விஜயதசமி அன்று தினமலரின் அரிச்சுவடி ஆரம்பம்

புதுச்சேரி : ‘தினமலர்’ நாளிதழின் மாணவர் பதிப்பான ‘பட்டம்’ இதழ் மற்றும் விவேகானந்தா வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி சார்பில், வரும் 24ம் தேதி ‘அரிச்சுவடி ஆரம்பம்’ நிகழ்ச்சி புதுச்சேரியில் நடக்க உள்ளது.

‘தினமலர்’ நாளிதழின் மாணவர் பதிப்பான ‘பட்டம்’ இதழ் மற்றும் புதுச்சேரி விவேகானந்தா வித்யாலயா சி.பி.எஸ்.இ.,பள்ளி இணைந்து நடத்தும் ‘அரிச்சுவடி ஆரம்பம்’ எனும் வித்யாரம்பம் நிகழ்ச்சி, புதுச்சேரி லாஸ்பேட்டை செல்லபெருமாள் பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில் உள்ள சரஸ்வதி ஹாலில் நடக்கிறது.

விஜயதசமி அன்று (24ம் தேதி) காலை 7.00 முதல் நடைபெற உள்ள நிகழ்ச்சியில், 2.5 மற்றும் 3.5 வயதுள்ள மழலைகளின் விரல் பிடித்து பிரபல கல்வியாளர்கள், மருத்துவர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பிரபலங்கள் ‘அ -ஆ’ எழுதி பழக்க உள்ளனர்.

நிகழ்ச்சியில், முன் பதிவு செய்த குழந்தைகள் மட்டுமே பங்கேற்க முடியும். பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ‘ஸ்கூல் கிட்’ பரிசாக வழங்கப்படும்.

விவேகானந்தா கல்வி குழும தலைவர் செல்வகணபதி எம்.பி., கலெக்டர் வல்லவன், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்திரன், ஆடிட்டர் செல்வராஜ், புதுச்சேரி சுகாதார துறை முன்னாள் இயக்குநர் மோகன்குமார் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று குழந்தைகளை வாழ்த்தி அகரம் கற்பிக்க உள்ளனர்.

குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் நாள் அவர்களின் வாழ்நாளில் மிக முக்கிய நாள். அவர்களது ஆரம்ப நிலை கல்வியறிவு தான் அவர்களது அறிவாற்றலுக்கும், நற்பண்புகளுக்கும் வாழ் நாள் முழுதும் துணை நிற்கும்.

விஜயதசமி திருநாள் கல்வியை கற்கும் வித்யாரம்பத்துக்கு உகந்த நாள். இந்நாளில் உங்கள் வீட்டு இளந்தளிர்களின் பிஞ்சு விரல் பிடித்து அரிச்சுவடியை ஆரம்பித்து வைக்க கல்வியாளர்கள், உயர் அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

கல்வி கோவிலுக்கு அடியெடுத்து வைக்க உங்க செல்ல குட்டீஸ்களை அழைத்து வாங்க. முன் பதிவுக்கு காத்திருங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *