புதன் பெயர்ச்சி பலன் 2023: விருச்சிகத்தில் குடியேறும் புதன்.. புது கூட்டணியால் யாரெல்லாம் கவனம்?

புதன் பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். புதனுடன் கூடவே சூரியனும், செவ்வாயும் குடியேறுவதால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

புதன் பெயர்ச்சி: ஒருவரின் ஜாதகத்தில் புதன் பாதிக்கப்பட்டால் நரம்பு பிரச்சினை, மனநோய், பேசுவதில் பாதிப்பு ஏற்படும். மூளை, நரம்பு, தண்டுவடம் ஆகியவற்றிற்கு ஆதிபத்யம் வகிக்கும் புதன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு நவம்பர் 8ஆம் தேதி பெயர்ச்சி அடைகிறார். புத்திக்கும், வித்தைக்கும் அதிபதியாக இருப்பவர் புதன் பகவான் அறிவு, ஆற்றல், கல்வி ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குபவர். வெளியில் தெரியும் நரம்புகளுக்கு காரணகர்த்தாவாக திகழ்கிறார். புதனின் நகர்வு என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்று பார்க்கலாம்.

மேஷம்: உங்கள் ராசிக்கு 3 மற்றும் 6 ஆம் வீட்டு அதிபதியான புதன் உங்கள் ராசிக்கு 8வது வீட்டில் மறைகிறார். எட்டில் புதன் மறைவது நல்ல அமைப்புதான் என்றாலும் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை.தேவையில்லாத பேச்சுக்களை குறைக்கவும். இடம் பொருள் அறிந்து பேசினால் நல்லதே நடக்கும். பணம் வருவாய் நன்றாக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீா்கள். சிலா் மனை நிலம் வாங்குவதற்கு சரியான காலம். உத்யோகம் தொழிலில் நன்மைகள் ஊதிய உயா்வு பெறுவீா்கள். சிலருக்கு நரம்பு பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் கவனமாக இருக்கவும். புதன்கிழமைகளில் புதனுக்கு பச்சைப்பயறு வைத்து வணங்கி விளக்கேற்றலாம். பச்சைக்காய்கறிகளை பசுவிற்கு வாங்கிக் கொடுக்கலாம்.

ரிஷபம்: உங்கள் ராசிக்கு 7வது இடத்தில் களத்திர ஸ்தானத்தில் புதன் பயணம் செய்யப்போகிறார். வீட்டில் தம்பதியரிடையே சின்னச்சின்ன சண்டை வரும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. சிலருக்கு கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்கலாம். காதலை சொல்ல இது ஏற்ற தருணம் அல்ல. உடல் நலனின் அக்கறை செலுத்தாவிட்டால் ஆபத்தாகி அப்புறம் தேவையில்லாமல் மருத்துவ செலவுகள் வந்து கையிருப்பு கரைந்து விடும். புதன்கிழமை மகாவிஷ்ணு கோவிலில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்: உங்கள் ராசி அதிபதி புதன் 6வது இடமான ருண ரோக ஸ்தானத்தில் அமர்வதால் தோல் நோய்கள் ஏற்படலாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய கால கட்டம் இதுவாகும். பேச்சு வன்மை அதிகரிக்கும். பண வரவு அதிகரிப்பதோடு கூடவே புகழும் கிடைக்கும். சகோதா்கள் உதவி கிடைக்கும். வீட்டில் கணவன்,மனைவியரிடையே உற்சாகம் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். கோவில்களுக்கு புனித யாத்திரை செல்ல வேண்டிய காலம். புதன்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் நெய் விளக்கேற்றி வழிபட நன்மையே நடக்கும்.

கடகம்: உங்கள் ராசிக்கு 5வது இடத்திற்கு புதன் இடப்பெயர்ச்சி அடைகிறார். அறிவும் ஆற்றலும் அதிகரிக்கும். எழுத்து பேச்சுத்திறமையும் அதிகரிக்கும். பணியிடத்தில் புத்திசாலித்தனம் வெளிப்படும். நண்பர்கள், உயரதிகாரிகள், இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட வழியில் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். கூடவே பிள்ளைகளுக்கு படிப்பு செலவும் அதிகரிக்கும். மேலும் நன்மைகள் நடக்க மகாவிஷ்ணுவை சகஸ்ராநாமம் கூறி வணங்கலாம்.

சிம்மம்: உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் ராசிநாதன் புதன் பகவான் பயணம் செய்யப்போகிறார். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். சமூகத்தில்அந்தஸ்து உயரும். உங்கள் வேலைக்கு ஏற்ற கூலி கிடைக்கும். வேலைகளில் புரமோசன் ஏற்படும். சிறந்த வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படும். பணம் பாக்கெட்டில் அதிகம் சேரும் கூடவே அதற்கேற்ப செலவும் அதிகரிக்கும். வீடு, வண்டி வாகன பராமரிப்புக்காக பணத்தை செலவு செய்ய வேண்டியிருக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி அழகுபடுத்துவீர்கள். தினந்தோறும் ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை கூறி விஷ்ணுவை வணங்கலாம்.

கன்னி: உங்கள் ராசிநாதன் புதன் 3வது வீட்டில் பயணம் செய்யப்போகிறார். புது முயற்சி செய்ய நல்ல நேரமாகும். இளைய சகோதரர்களின் உடல் நலம் பாதிக்கப்படும். இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு மேம்படும். தாய்மாமனுடன் சின்னச் சின்ன சண்டைகள் ஏற்படும்.வேலை தொடர்பாக வெளிநாடு செல்வதற்கான நேரம் இதுவாகும். எழுத்தாளர்களுக்கு நன்மை தரும் காலமாகும். புதன்கிழமைகளில் ஏழைகளுக்கு பழங்களை தானம் செய்வதால் நன்மை ஏற்படும்

துலாம்: உங்கள் ராசியில் சூரியன் செவ்வாயுடன் பயணம் செய்யும் புதன் அடுத்த வாரம் முதல் 2வது இடத்தில் தன, வாக்கு ஸ்தானத்தில் அமர்வதால் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் கூடும். பேச்சில் இனிமை அதிகரிக்கும். பாக்கெட்டில் பணம் சேரும் சொத்து சோ்க்கை உண்டு. உடல் நிலையில் கவனம் தேவை. புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடை அணிய மேலும் நன்மைகள் நடக்கும். புதன்கிழமைகளில் பச்சைப்பயறு தானம் செய்யலாம்.

விருச்சிகம்: உங்கள் ராசியில் புதன் குடியேறுவதால் குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். தம்பதியரிடையே நெருக்கம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு உடல்நலனில் அக்கறை தேவை. நரம்பு தொடர்பான பிரச்சினை ஏற்படும் என்பதால் கவனமாக இருக்கவும். சிலருக்கு ப்ரமோசனுடன் கூடிய ஊதிய உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கவும் வாய்ப்பு அதிகரிக்கும். புதன்கிழமைகளில் ஏழைகளுக்கு சர்க்கரை தானம் செய்யலாம்.

தனுசு: உங்கள் ராசிக்கு 12வது வீடான விரைய ஸ்தானத்தில் புதன் பயணம் செய்யப்போவதால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள், வாக்குவாதம் வந்து செல்லும். உத்தியோகத்தில் எதிரிகள் சின்னச் சின்ன குடைச்சல்களை கொடுப்பார்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். உடல்களில் காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்படும். ஒரு சிலருக்கு நரம்பு பிரச்சினை, கை,கால்கள் நடுக்கம், புத்தியில் தடுமாற்றம் சிலருக்கு வரும் என்பதால் இதனை தடுக்க, மகா விஷ்ணுவுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். ஸ்ரீராம நாம ஸ்தோத்திரத்தை கூறி வணங்கலாம்.

மகரம்: புதன் உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் லாப ஸ்தானத்தில் பயணம் செய்யப்போவதால் வருமானம் அதிகரிக்கும். வீடு மனை நிலம் வாங்க காலம் கணிந்து வருகிறது. வீட்டில் பொன் பொருள் சோ்க்கை ஏற்படும். இது யோகமான காலமாகும். பண வருமானம் அதிகரிக்கும் திடீா் அதிர்ஷ்டம் ஏற்படும். வாய்ப்புகளும், வருமானமும் அதிகரிக்கும். புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடைகளை அணியலாம். புதன் யந்திரத்தை வீட்டில் வைத்து வணங்க நன்மைகள் அதிகரிக்கும்.

கும்பம்: புதன் உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் பயணம் செய்யப்போகிறார். பணியிடத்தில் உங்கள் வேலை பளிச்சிடும். மதிப்பு மரியாதை கூடும். பண வருமானம் திருப்தி தரும். கணவன், மனைவி இடையே அந்நியோன்னியம் அதிகரிக்கும். வேலையில் திறமை அதிகரிக்கும். காதலை சொல்ல ஏற்ற தருணம் இதுவாகும். தாய் வழி உறவினா்கள், தாய்மாமன்கள் மூலம் நன்மைகள் நடைபெறும். அதிகம் நன்மைகள் நடக்க புதன்கிழமைகளில் பச்சைப்பயறு வேகவைத்து நிவேதனம் செய்யலாம்

மீனம்: உங்கள் ராசிக்கு 9வது வீட்டில் புதன் பயணம் செய்வதால் பணம் தாராளமாக வரும். தந்தையின் உடல்நிலையில் அக்கறையும் கவனமும் தேவை. பலருக்கு புது வேலைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிலருக்கு புரமோசன் ஊதிய உயர்வு கிடைக்கும். பிள்ளைகளுக்கு நன்மைகள் நடக்கும் காலமாகும். மாணவர்களுக்கு கல்லூரிகளில் மேல்படிப்புக்கு இடம் கிடைக்கும். தம்பதியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மனைவி வழியில் அதிக உதவிகள் கிடைக்கும். புதன் காயத்ரி மந்திரத்தை கூறி வர தீமைகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *