1. முதலில் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியது சபரிமலை யாத்திரை என்பது சுற்றுலா அல்ல. அது கடுமையாக விரதம் இருந்து செல்ல வேண்டிய புனிதப் பயணம். குறைந்த பட்சம் ஒரு மண்டலகாலம் விரதம் இருக்க வேண்டும். தமிழகத்தில் ஒரு மண்டலம் என்றால் 48 நாள்கள் என்று கணக்கு வைத்திருக்கிறோம். கேரளாவில் 41 நாள்கள். எனவே குறைந்த பட்சம் 41 நாள்களாவது விரதம் இருக்க வேண்டும். இன்று மாலை அணிந்து நாளை புறப்பட்டுச்செல்வது என்பது அடிப்படையிலேயே தவறு. இதை குருசாமிகள் கண்டித்துச் சொல்வார்கள். அதைக் கேட்டு விரதம் இருக்கும் மன உறுதி கொண்டு மாலை அணியுங்கள்.
2. அடுத்து குருசாமியை அறிந்துகொள்ளுங்கள். நிச்சயம் உங்களுக்குத் தெரிந்தவர்களில் நல்ல குருசாமிகள் இருப்பார்கள். அவரை அறிந்து அவரிடம் உங்களைப் பற்றிய விஷயங்களைச் சொல்லி மாலை அணிந்துகொள்ள உத்தரவு பெறுங்கள். பின்பு வீட்டில் தாய் தந்தையரின் உத்தரவைப் பெறுங்கள். இந்த இரண்டு உத்தரவுகளும் பெற்ற பிறகு மாலையணியுங்கள்.
3. முதலில் முத்திரை மாலையான 108 மணிகள் கொண்ட துளசிமணி மாலையை வாங்கி, ஏதேனும் ஒரு கோயிலில், எந்த குருசாமி உங்களை மலைக்கு அழைத்துச் செல்லப்போகிறாரோ அந்த குருசாமியின் திருக்கரங்களால் மாலை அணிந்து கொள்ள வேண்டும். குருசாமி ஊரில் இல்லாத பட்சத்தில் கோயிலுக்குச் சென்று அர்ச்சகரை குருவாக ஏற்று மாலை அணியலாம்.
சிலர் வீட்டிலேயே பூஜை செய்து தாயின் கரத்தால் மாலை அணிந்து கொள்ளும் வழக்கமும் வைத்திருக்கிறார்கள். மாலை அணியும் முன், அந்த மாலையை பூஜையறையில் புனிதமான பசும்பாலில் அமிழ்த்தி ஊறவைக்க வேண்டும். அவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட முத்திரை மாலையை அணிந்துகொண்டவர், ‘ஐயப்ப சாமி’ என்று அழைக்கப்படுவார். அவரின் விரதகாலம் அந்தக் கணம் முதல் தொடங்குகிறது.
4. ஒரு மண்டல காலமும் பிரம்மசர்யத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தினமும் காலையும் மாலையும் நீராடி உடலைத் தூய்மை செய்துகொள்ள வேண்டும். அதேபோன்று இரு வேளையும் பூஜை செய்து சரணகோஷம் இட்டு மனதைத் தூய்மை செய்துகொள்ள வேண்டும்.
5. விரத காலங்களில் எளிமையான உணவையே உட்கொள்ள வேண்டும். பெரும்பாலும் வெளியிடங்களில் உண்பதைத் தவிர்ப்பது நல்லது. அப்படியே உண்டாலும் சாத்விக உணவுகளையே உண்ணவேண்டும். அதற்கும் வாய்ப்பில்லாத இடத்தில் இருக்க நேர்ந்தால் பால் மற்றும் பழங்கள் உட்கொள்வதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
6. விரதகாலத்தில் செய்யக் கூடாதவை என்று ஒரு பெரிய பட்டியலே உண்டு. மது அல்லது போதைப்பழக்கங்கள் ஏதேனும் இருந்தால் அதை அடியோடு விட்டு விட வேண்டும். இதில் சலுகையே கிடையாது. தற்போது சிலர் அந்தப் பழக்கங்களோடே மலைக்கு வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களின் விரதம் பலன் தராது. எண்ணெய் தேய்த்துக்குளிப்பது, சவரம் செய்துகொள்வது, முடிவெட்டிக் கொள்வது ஆகியன முற்றிலும் தவிர்ப்பது நல்லது. மேலும் பிறப்பு, இறப்புத் தீட்டுகள் இருக்கும் வீடுகளுக்கும் செல்லக் கூடாது. அவ்வாறு கலந்துகொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் மாலையைக் கழற்றிய பிறகே செல்லவேண்டும். அதற்கு குருசாமியின் அனுமதி தேவை. ஒருமுறை மாலையைக் கழற்றிவிட்டால் அடுத்த ஆண்டுதான் மீண்டும் போட வேண்டும்.
7. பெரும்பாலும் கறுப்பு, நீலம், காவி, பச்சை நிற ஆடைகளையே அணிய வேண்டும். கட்டாயம் மேல் வஸ்திரம் எனப்படும் அங்க வஸ்திரம் இல்லாமல் இருக்கக் கூடாது. சட்டை அணிந்தாலும் துண்டு கையோடு இருக்க வேண்டும்.
8. தங்களைப்போன்ற ஐயப்ப பக்தர்களைக் காணும்போது, ‘சாமி’ என்றே அழைக்க வேண்டும். மாலை அணிந்தவர்கள் பெண்களாக இருந்தால், ‘மாளிகைபுறத்து சாமி’ என்று அழைக்கும் வழக்கமும் உண்டு.
9. உறங்கும்போது தலையணை, மெத்தை ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது. மெல்லிய துணிகளையே விரித்துப் படுக்கலாம். தனியாகப் படுப்பதுவே நலம். எக்காரணம் கொண்டும் பகலில் உறங்குவதைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.
10. மலைக்குப் புறப்படும் முன்பாக வீட்டில் குருசாமியைக் கொண்டு ஐயப்பனுக்கு பூஜை செய்து அன்னதானம் செய்ய வேண்டியது அவசியம். இதில் அறிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், கடன் வாங்கிச் செலவு செய்யக் கூடாது. அன்னதானம் ஐயப்ப பூஜையில் பிரதானம். ஐயனை அன்னதானப் பிரபு என்றுதான் அழைக்கிறோம் என்றாலும் கடன் வாங்கிப்பெரிய அளவில் பூஜை செய்வதோ உணவிடுவதோ தேவையில்லை. பூஜைக்கு வரும் ஐயப்ப சாமிகளுக்கு ஒரு வாழைப்பழம் தான் தரமுடியும் என்றாலும் அதைக் கொடுத்து ஆசி வாங்கிக்கொள்ளலாமே தவிர கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
மேற்கண்ட விதிகள் அனைத்தையும் அறிந்துகொண்டு பய பக்தியோடு விரதம் மேற்கொள்ள இயலும் என்றால் கட்டாயம் மாலை அணிந்துகொள்ளலாம். ஐயப்பன், மனதில் பக்தியைப் பார்ப்பவன். நீங்கள் உண்மையான பக்தியோடு இருந்தால் உங்களை மலைக்கு அழைக்க வேண்டியது அவன் பொறுப்பு. பக்தியோடு அவனைப் பிரார்த்திப்போம். அவன் நம் வேண்டுதல்களை நிறைவேற்றுவதோடு அவன் கூட இருந்து வழிகாட்டி சபரிகிரி சந்நிதானத்துக்கு நம்மை அழைத்துச் செல்வான்.