நாட்டில் திடீரென எகிறும் கொரோனா.. 4000ஐ தொட்ட ஆக்டிவ் கேஸ்கள்.. தென் மாநிலங்களில் தான் நிலைமை மோசம்

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 4000ஐ தாண்டியுள்ளது.

கடந்த 2019இல் பரவ தொடங்கிய கொரோனா அதன் பிறகு உலகெங்கும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரவே சில ஆண்டுகள் வரை ஆனது. அதன் பிறகு கொரோனா வேக்சின் உள்ளிட்ட நடவடிக்கைகளால் கொரோனா கட்டுக்குள் வந்திருந்தது. இதற்கிடையே சமீப காலங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

4000ஐ தொட்ட ஆக்டிவே கேஸ்கள்: குறிப்பாக ஆக்டிவ் கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று நமது நாட்டில் இருக்கும் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 4,000ஐ தாண்டியுள்ளது. அதேபோல கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாட்டில் புதிதாகப் பரவும் ஜேஎன் 1 கொரோனா இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் ஆக்டிவ் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் 3,742இல் இருந்து 4,054ஆக உயர்ந்துள்ளது, கேரளாவில் தான் ஆக்டிவ் கேஸ்கள் அதிகபட்சமாக இருக்கிறது. அங்கே ஆக்டிவ் கேஸ்கள் ஒரே நாளில் 128 அதிகரித்து 3,000ஐ தாண்டியது. இப்போது கேரளாவில் ஆக்டிவ் கேஸ்கள் 3128ஆக உள்ளது.

குணமடைந்தோர் எவ்வளவு: நாடு முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 315 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். நாட்டில் 4.4 கோடி பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள நிலையில் இதன் மூலம் நாட்டில் கொரோனாவால் குணமடைந்தோர் விகிதம் 98.41%ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாகக் கேரளாவில் ஒரே நாளில் 247 பேர் குணமடைந்துள்ளனர்.. அடுத்து கர்நாடகாவில் 33 பேருக்கும் தமிழ்நாட்டில் 20 பேருக்கும் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு: உயிரிழப்பு என்று வரும் போது கேரளாவில் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாட்டில் இதுவரை பதிவான கொரோனா உயிரிழப்புகள் 5,33,334ஆக உயர்ந்துள்ளது.

தானே: இதற்கிடையில், மகாராஷ்டிராவில் உள்ள தானேயில் 5 பேருக்கு புதிய ஜே.என்.1 வகை கொரோனா உறுதியாகியுள்ளது. புது ஜேஎன் 1 கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் பெண் ஆவார். அதேநேரம் அங்கே யாருக்கும் தீவிர பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆகும் சூழல் ஏற்படவில்லை. தானே நகரில் மட்டும் இப்போது ஆக்டிவ் கேஸ்கள் 28ஆக உள்ளது. அவர்களில் இருவர் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றவர்கள் வீடுகளிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் கூட இதை கண்டு அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. அதேநேரம் முதியவர்கள் இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களுக்கு வரும் போது மாஸ்க் அணியும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகாரிகள் தகவல்: இந்தியாவில் எந்தவொரு இடத்திலும் இந்த புதிய ஜேஎன் 1 கொரோனாவால் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதற்கான சான்றுகள் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஜேஎன்.1 கொரோனா என்பது ஓமிக்ரான் வேரியண்டின் ஒரு திரிபு ஆகும். இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் இந்த புது வேரியண்ட்டால் கொரோனா அதிகரித்து வருகிறது. உலக சுகாதார அமைப்பு இந்த கொரோனா வேரியண்ட்டை கவனிக்க வேண்டிய கொரோனாவாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *