நல்லவர்களாக நடிக்கும் நடிகர்களுக்கு மத்தியில் திரையிலும், தரையிலும் நல்லவராகவே வாழ்ந்தவர் கேப்டன்: இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், அமீர் உள்ளிட்டோர் புகழாரம்

சென்னை: நல்லவர்களாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களுக்கு மத்தியில் திரையிலும், தரையிலும் நல்லவராகவே வாழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த் என இயக்குனர் அமீர் புகழாரம் செலுத்தியுள்ளார். சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள கட்சிதலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்றும் நாளையும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை மாலை 4.30மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். அவரது மறைவிற்கு அடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கள், அஞ்சலி தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்,

திரையுலகிலும், அரசியலிலும் சகாப்தம் படைத்தவர்: எஸ்.ஏ.சந்திரசேகர்

திரையுலகிலும், அரசியலிலும் சகாப்தம் படைத்தவர் கேப்டன் விஜயகாந்த் என இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இரங்கல் தெரிவித்துள்ளார். இன்றுடன் சகாப்தம் முடிந்துவிட்டது; இந்த நிலையில் கண்ணீர் சிந்துவதை தவிர எனக்கு வேறு மொழி தெரியவில்லை. விஜயகாந்த் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்; அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன். நான் கேப்டன் விஜயகாந்த்ஐ பார்க்க முடியாத நிலையில் உள்ளேன்; இந்த நாளில் நான் துபாயில் இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

எளியவர்களின் பாதுகாவலர் விஜயகாந்த்: அமீர்

நல்லவர்களாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களுக்கு மத்தியில் திரையிலும், தரையிலும் நல்லவராகவே வாழ்ந்தவர் கேப்டன் என இயக்குனர் அமீர் புகழாரம் தெரிவித்துள்ளார். ஏழைகளின் தோழன், எளியவர்களின் பாதுகாவலன், அநீதியை தட்டிக் கேட்கும் துணிச்சல்காரர். நிஜ நாயகனாகவே வாழ்ந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவு உண்மையிலேயே ஈடு செய்ய முடியாத இழப்பு. மறுபடியும் பேசி அளவளாவும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இருந்த என்னை, அவரது மறைவு பேரதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இன்று உச்ச நடிகராகவும், அரசியலில் பெரும் பதவியில் இல்லாமல் இருந்தாலும் மக்கள் இதயத்தில் நீங்கா இடம் பெற்றவர். சாதி, மதம் கடந்த மனிதநேயப் பண்பாளர், எங்களது மண்ணின் மைந்தன் கேப்டன் விஜயகாந்த்.

கேப்டன் மறைவு நடிகர் சங்கத்துக்கு தனித்த பேரிழப்பு: நடிகர் கார்த்தி

கேப்டன் விஜயகாந்த் காலமானார் என்ற செய்தி என் மனதை கடும் சோகத்தில் ஆழ்த்துகிறது என நடிகர் கார்த்தி வருத்தம் தெரிவித்துள்ளார். நடிகர் சங்கத்துக்காக பல நல்ல முன்னெடுப்புகளை செய்தவர் கேப்டன் விஜயகாந்த். கேப்டன் விஜயகாந்த் மறைவு நடிகர் சங்கத்துக்கு தனித்த பேரிழப்பாகும். சக நடிகர்கள், ஃபெப்சி தொழிலாளர்கள், நடிகர் சங்கம் உள்ளிட்ட அனைவரது முன்னேற்றத்திலும் கேப்டன் பங்கு அளப்பரியது. தென்னிந்திய நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டெடுத்த இமாலய சாதனை கேப்டனையே சேரும். தலைமைப் பண்போடு வாழ்ந்து காட்டிய கேப்டன் அவர்களின் வாழ்க்கை நம் எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணம். நான் வெளிநாட்டில் இருப்பதினால், விஜயகாந்த் மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாத நிலை.

ஒடுக்கப்பட்ட மக்கள் குரலாக ஒலித்தவர் விஜயகாந்த்: ரஞ்சன்குமார் புகழாரம்

திரைப்படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்தவர் விஜயகாந்த் என காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு மாநில தலைவர் ரஞ்சன்குமார் புகழாரம் தெரிவித்துள்ளார். கடைசிவரை வள்ளலாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார்; அவரது இழப்பு தமிழ்நாட்டுக்கு பேரிழப்பாகும்.

இரு துருவங்களை எதிர்கொண்ட ஆச்சர்யம்: லிங்குசாமி

சினிமா, அரசியல் இரண்டிலும் இரு துருவங்களை எதிர்கொண்ட ஆச்சர்யம் விஜயகாந்த் என்று லிங்குசாமி புகழாரம் தெரிவித்துள்ளார். நீ இன்ஸ்டியூட்டில் பயிலவில்லை; இன்ஸ்டியூட்டில் பயின்ற பலரை இயக்குநராக்கியிருக்கிறாய். மக்களின் கண்ணீரை உணர்ந்தவன் நீ, எதிரே நிற்பவர் பசி அறிந்தவன் நீ. இதயத்திலிருந்தே எல்லா முடிவுகளையும் எடுத்தாய், அதனாலேயே பல இதயங்களை வென்றாய்.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *