தென்ஆப்பிரிக்காவுடன் டெஸ்ட் தொடர்; கோஹ்லி ரன் குவித்தால் இந்தியாவுக்கு வெற்றிவாய்ப்பு: ஜாக் காலிஸ் சொல்கிறார்

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடர், ஒருநாள் தொடர் முடிவடைந்த பின், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ம் தேதி தொடங்குகிறது. இந்திய அணி இதுவரை தென்ஆப்பிரிக்க மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை கூட வென்றதில்லை. தற்போது இந்திய அணியில் திறமையான வீரர்கள் இருப்பதால் முதல் டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்று இந்திய அணி வரலாற்றை உருவாக்க இது ஒரு சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஜாக்ஸ் காலிஸ் கூறியதாவது:-

விராட் கோஹ்லி ஒரு பெரிய வீரர், அவர் எங்கிருந்தாலும் சரி. தென்ஆப்பிரிக்காவில் விளையாடி ஓரளவு வெற்றியும் பெற்று இருக்கிறார். அவர் அந்த அனுபவத்தை சக வீரர்களுக்கு, குறிப்பாக இளம் வீரர்களுக்கு சொல்லிக் கொடுப்பார், தென்ஆப்பிரிக்க சூழ்நிலைகளை எவ்வாறு நிர்வகிப்பது, இங்கே போட்டியின் போது என்ன எதிர்பார்க்கலாம் என்பது பற்றிய யோசனைகளை அவர்களுக்கு அவரால் சொல்லிக் கொடுக்க முடியும். மேலும் கோஹ்லி தென்ஆப்பிரிக்காவில் ஒரு பெரிய டெஸ்ட் தொடரை ஆட வேண்டும் என விரும்புவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். தற்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார். எனவே இந்திய அணியின் வெற்றிக்கு உதவுவதில் அவர் முக்கிய பங்கு வகிப்பார் என நினைக்கிறேன். அவர்கள் இங்கு வெற்றிபெற வேண்டுமானால், விராட் கோஹ்லி ரன் குவித்து ஒரு நல்ல டெஸ்ட் தொடரைப் பெற்றிருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

தென்ஆப்பிரிக்க மண்ணில் இதற்கு முன் டெஸ்ட் தொடரில் அதிக ரன் குவித்த வீரர் விராட் கோஹ்லி தான். விராட் கோஹ்லி தென்ஆப்பிரிக்காவில் 14 இன்னிங்ஸ்களில் களமிறங்கி 719 ரன்கள் (பேட்டிங் சராசரி 51.36) எடுத்து இருக்கிறார். இதில் 2 சதங்கள் மற்றும் 3 அரைசதங்களையும் அடித்துள்ளார். இதன் காரணமாக கோஹ்லி இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடுவார், இந்திய அணிக்கு முதல் டெஸ்ட் தொடர் வெற்றியை தென்ஆப்பிரிக்க மண்ணில் பெற்றுக் கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *