தீ இவன் விமர்சனம்

பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த பெரும் பண்ணை விவசாயி ராதாரவி. அவரது மகன் கார்த்திக், மகள் சேது அபிதா. அபிதா இன்னொரு சமுதாயத்தை சேர்ந்த இளைஞனை காதலித்து, கர்ப்பமாகிறார். இதனால் குடும்ப மானம் போய்விட்டதாக கருதும் ராதாரவி, அபிதாவை குடும்பத்தை விட்டு விலக்கி வைத்துவிட்டு அவமானம் தாங்காமல் மனைவியுடன் இறந்து போகிறார். அதன்பிறகு குடும்பத் தலைவராகிறார் கார்த்திக். குடும்பத்தை விட்டு விலகிச் செல்லும் அபிதா கணவனை இழந்த நிலையிலும் மகன் சுமனை வளர்த்து ஆளாக்குகிறார். தலைமுறை இடைவெளிக்கு பிறகு கார்த்திக் மகள் அர்த்திகாவை காதலிக்கிறார் சுமன். மகள் அர்த்திகாவின் காதலை கார்த்திக் ஏற்றாரா?. தந்தை ராதாரவி போலவே முடிவெடுத்தாரா? என்பதுதான் படத்தின் கதை. முந்தைய தலைமுறை எடுத்த ஒரு முடிவை அடுத்த தலைமுறை எப்படி மாற்றி அமைக்கிறது என்பதுதான் படத்தின் ஒன்லைன்.
பல வருட இடைவெளிக்கு பிறகு கார்த்திக் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அனுபவ நடிப்பை தந்திருக்கிறார்.

அவரது மனைவியாக சுகன்யா இயல்பாக நடித்திருக்கிறார். பாசக்கார தங்கையாக அபிதா நெகிழ்ச்சி ஏற்படுத்துகிறார். புதுமுகங்கள் சுமன், அர்த்திகா காதல், ரொமான்ஸ் என படத்தின் யூத் ஏரியாவை கவனித்துக் கொள்கிறார்கள். ஐஸ்வர்யா லட்சுமி, யுவராணி, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, அஸ்மிதா என பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் இருக்கிறது. படத்தின் பலமும் அதுதான். பலவீனமும் அதுதான். எல்லா கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுப்பதற்காக கதையை நீட்டி முழக்கி சொல்லி இருப்பதால் சோம்பல் முறிக்க வைக்கிறது படம். சன்னி லியோனின் கவர்ச்சி நடனம் ரசிக்க வைத்தாலும் கதைக்கு தேவையில்லாத திணிப்பு. பாடல்கள் இனிமை. ஒய்.என்.முரளியின் ஒளிப்பதிவு கதைக்கு தேவையானதை கொடுத்திருக்கிறது, அலிமிர்சாவின் பின்னணி இசை சுமார். குடும்ப உறவுகள், ஜாதி அடக்குமுறை பற்றி பேச வந்த இயக்குநர் டி.எம்.ஜெயமுருகன் அதை நேர்த்தியான திரைமொழியில் சொல்லி இருந்திருக்கலாம்.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *