திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில்: கோயில்களில் கார்த்திகை மகா தீபம் ஏற்றம்

திருவள்ளூர்/செங்கை/காஞ்சி: திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கார்த்திகைதீபத் திருவிழா நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை மூலவர், உற்சவருக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்கக் கவசம், ஆபரணங்கள் அணிவிக்கப்பட்ட சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 4 மணியளவில் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்நடைபெற்றது. மாலை 6 மணிக்குஉற்சவர் முருகன், வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் மாடவீதிகளில் வலம் வந்தார். அப்போது, கோயில் வளாகத்தில் தேரடி அருகே சொக்கப்பனையில் நெய் தீபம் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து, கோயில் எதிரே சுமார் 150 அடி உயரத்தில் உள்ள பச்சரிசி மலையில் சுமார் 150 கிலோ நெய் மற்றும் 700 மீட்டர் நீள திரியால் தயாரிக்கப்பட்ட விளக்கில், தீபம் ஏற்றப்பட்டது. இந்நிகழ்வுகளில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட்டது. அதேபோல, திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில், திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோயில், திருப்பாலைவனம் திருப்பாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் தீபம் ஏற்றி, கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை முதலேவேதகிரீஸ்வரருக்கு சிறப்பு ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து, கொட்டும் மழையில், மாலை 6 மணியளவில் கோயிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, ’அரோகரா அரோகரா’ என முழக்கமிட்டு சுவாமிதரிசனம் செய்தனர். மேலும், நேற்றுபக்தர்கள் கோயிலைச் சுற்றி கிரிவலம்வந்து, சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல், திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் கோயில், கூவத்தூர் வாலீஸ்வரர், திருக்கழுக்குன்றம் ருத்ரகோட்டீஸ்வரர், அச்சிறுப்பாக்கம் பசுபதீஸ்வரர் மற்றும் ஆட்சீஸ்வரர் கோயில்கள் உட்பட மாவட்டத்தின் பல்வேறு சிவாலயங்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம்: குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, குன்றின் மீதுசுமார் 12 அடி உயரத்தில் உள்ளதூணின் மீது அகண்ட கொப்பறைவைத்து அதில் சுமார் 20 லிட்டர்நெய் ஊற்றி பெரிய அளவில் திரிவைத்து அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. அங்கு கூடியிருந்த மக்கள் `அரோகரா’ கோஷமிட்டு வழிபட்டனர். மேலும் கோயில் வளாகம் முழுவதும் 5008 அகல் விளக்குகளை பக்தர்கள் ஏற்றி வைத்தது குறிப்பிடத்தக்கது. கோயில் வளாகத்தில் சிவலிங்கம், மயில் போன்று கோலம்வரைந்து அதனை சுற்றி அகல் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. குமரகோட்டம் முருகன் கோயில், ஏகாம்பரநாதர், கச்சபேஸ்வரர், முக்தீஸ்வரர், கயிலாசநாதர், சத்யநாதஸ்வாமி, வழக்கறுத்தீஸ்வரர், செவந்தீஸ்வரர் கோயில்கள் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *