திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிகாலையில் ஒளிர்ந்த பரணி தீபம்.. அதிர்ந்த அரோகரா முழக்கம்

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. கோயில் கருவறையின் முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்ட போது கூடியிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று முழக்கமிட்டனர்.

திருவண்ணாமலை: சிவபெருமானில் பஞ்ச பூத தலங்களில் பக்தர்களால் அக்னி தலமாகப் போற்றப்படுவது திருவண்ணாமலை. சிவபெருமான் மலை வடிவமாக ஜோதி வடிவமாகக் காட்சி அளிப்பதாக ஐதீகம். இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கார்த்திகை தீப திருவிழா: இந்த ஆண்டு கார்த்திகை மாத தீபத் திருவிழா கடந்த 17ஆம் தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினந்தோறும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அண்ணாமலையாரும் உண்ணாமுலை அம்மனும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கடந்த வியாழக்கிழமையன்று பஞ்சரத தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

பரணி தீபம்:

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கார்த்திகை தீப திருவிழாவான இன்று அதிகாலை 5 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அண்ணாமலையார் கருவறை முன்பாக ஏகன் அனேகனாக மாறியும், அனேகன் ஏகனாக மாறும் தத்துவத்தை விளக்கும் விதமாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் அருணாச்சலேஸ்வரர் கோவிலின் உள்பிரகாரத்தில் வலம் வந்து உண்ணாமுலையம்மன் உள்ளிட்ட அனைத்து சந்நிதானங்களிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மாலையில் மகாதீபம்:

விழாவின் சிகர நிகழ்ச்சியாக கோவிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் இன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. சிவனும், சக்தியும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் விதமாக அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலில் காட்சியளித்ததும் சரியாக மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.

கிரிவலம்:

கார்த்திகை தீபத்திருவிழாவை யொட்டி 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மலை மீது மகா தீபம் ஏற்றுவதற்காக 7அடி உயரம், 200 கிலோ எடை கொண்ட கொப்பரை சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் நேற்று மலை உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது.

3500 லிட்டர் நெய்:

தீபம் ஏற்றுவதற்காக பக்தர்கள் மற்றும் ஆவின் நிர்வாகத்திடம் இருந்து பெறப்பட்ட 3500 லிட்டர் நெய் மற்றும் ஆயிரம் மீட்டர் காடா துணிகளும் அடுத்தடுத்து மலை உச்சிக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டன. மகா தீபத்தை காண 2,500 பேர் மட்டுமே மலை மீது ஏறிச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம் மின்விளக்கு ஒளியில் ஜொலிக்கிறது.

ஜொலிக்கும் திருவண்ணாமலை:

திருக்கார்த்திகையின்போது குறைந்தபட்சம் வீடுகளில் 27 தீபங்கள் ஏற்றப்பட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. 27 நட்சத்திரங்களைக் குறிக்கும் வகையில் விளக்குகளை ஏற்ற வேண்டும் என்பதே இதன் ஐதீகம். வீடு முற்றம், சமையலறை, திண்ணை, மாடம், பூஜையறை, கொல்லைப்புறம் என்று அனைத்து இடங்களிலும் தீபம் ஏற்றுவது சிறப்பானது என்பதால் இன்றைய தினம் அண்ணாமலையார் ஆலயத்தில் மகா தீபம் ஏற்றப்பட்ட உடன் வீடுகள் தோறும் மக்கள் விளக்கேற்றி வழிபடுவார்கள். அண்ணாமலையார் ஆலயத்தில் வான வேடிக்கை நடைபெறும்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *