திருச்செந்தூர் வந்த பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப இலவச பேருந்து சேவை

கனமழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட திருச்செந்தூரில், வெளியூர் பக்தர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு தமிழக அரசு இலவச பேருந்துகள் இயக்கியுள்ளது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக போற்றப்படும் திருச்செந்தூர் ஆலயத்திற்கு தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். குறிப்பாக வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கோயிலில் கூட்டம் அலைமோதும். அதேபோல் கடந்த சனிக்கிழமையன்றும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூருக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர்.

ஆனால், வளமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த சனிக்கிழமை இரவு முதலே மழை பெய்யத் தொடங்கியது. வரலாறு காணாத வகையில் இடைவிடாமல் கொட்டிக் கொண்டிருந்த மழை ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்து பெய்தது. இதனால் திருச்செந்தூர் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. பேருந்து நிலையங்கள், ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியதால் அனைத்து போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.

இதனால் வெளியூர் பக்தர்கள் திருச்செந்தூரில் சிக்கி தவித்தனர். தங்க இடம் இல்லாமல் கோவிலுக்குள்ளும், அருகில் இருந்த விடுகளிலும் தங்கினர். கோவிலில் மூன்று நேரமும் சாப்பாடு வழங்கப்பட்டாலும், குழந்தைகளுக்கு பால் வாங்க முடியாமலும், பணம் இல்லாமல் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர். சிலர் விடுதிகளுக்கு பணம் கொடுத்து தங்குவதற்கு கையில் இருந்த பணம் முழுவதையும் செலவழித்துவிட்டனர்.
இதையடுத்து, தாங்கள் சொந்த ஊர் திரும்ப இலவச பேருந்துகளை இயக்க வேண்டும் என வெளியூர் பக்தர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு இலவச பேருந்துகள் இயக்கியுள்ளது. இன்று காலை முதல் திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, ராஜபாளையம் பகுதிகளுக்கு இலவச பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பணம் இல்லாத சூழலில் தமிழக அரசு இயக்கிய இலவச பேருந்து சேவைக்கு நன்றியையும் பக்தர்கள் தெரிவித்தனர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *