முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு ஆண்டுதோறும் நடக்கும் விழாக்களில் கந்தசஷ்டித் திருவிழா முக்கியமானது. இந்தாண்டு கந்தசஷ்டி விழா, வரும் 13-ம் தேதி காலை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 18-ம் தேதி மாலை 4 மணிக்குத் திருச்செந்தூர் கடற்கரையில் நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து 19-ம்தேதி, சுவாமி குமரவிடங்கப் பெருமானுக்கும், தெய்வானை அம்பிகைக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். கந்த சஷ்டி விழா நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகம், விடுதிகள், தனியார் லாட்ஜ்கள், சமுதாய விடுதிகளில் தங்கியிருந்து விரதம் மேற்கொள்வது தனிச்சிறப்பாகக் கருதப்படுகிறது. இந்த விழா நடக்கும் 7 நாள்களில் மட்டும் சுமார் 5 லட்சம் முதல் 10 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2017-ம் ஆண்டு கோயில் கிரிப்பிராகார மேற்கூரை இடித்த பின்னர் கோயில் விடுதிகள் பலமிழந்து விட்டதாகக்கூறி கோயில் விடுதிகள் அகற்றப்பட்டன. 308 விடுதிகள் இடிக்கப்பட்டன. அதன்பின்னர் சுமார் ரூ.30 கோடி மதிப்பீட்டில் யாத்ரீகர் நிவாஸ் கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டு தற்போது பணிகள் முடிவடையும் தறுவாயில் உள்ளன. திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் கடந்த சில மாதங்களாக ரூ.300 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடந்து வருகின்றன.

இந்தக் கட்டுமானப் பணிகளால் பக்தர்கள் தங்கி விரதம் மேற்கொள்வது சிரமமாக இருக்கும் என்பதால், திருக்கோயில் நிர்வாகம் சார்பில் கோயில் வளாகத்தில் காலியாக இருக்கும் இடங்களில் தகர கொட்டகை செட் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நாழிக்கிணறு பஸ் ஸ்டாண்ட் பகுதி, கிழக்கு கிரிப் பிராகாரம், சண்முக விலாசம் மண்டபம் எதிரே நாழிக்கிணறு செல்லும் நடைபாதை வலதுபுறம், வெள்ளைக் கல் மண்டபம், அனுக்கிரகம் மண்டபத்தின் இருபுறம், இணை ஆணையர் அலுவலகம் எதிரே உள்ள பகுதி உள்ளிட்ட இடங்களில் பிரமாண்டமான முறையில் தகரக் கொட்டகை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
மழைகாலம் என்பதால் கொட்டகையில் மரப்பலகைகளால் தரைத்தளம் அமைக்கப்படுகிறது. இதனால் மழை வந்தாலும் மழைநீர் எளிதாக வெளியேறிச் செல்லும். இந்தத் தகர செட்டுகளுக்குள் ஆண், பெண் பக்தர்களுக்குத் தனித்தனிக் குளியலறை மற்றும் கழிப்பிட வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சஷ்டி விழாவில் கோயில் வளாகத்தில் சுமார் 20 ஆயிரம் பக்தர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மூவர் சமாது, அய்யாவழி கோயில் அருகேயும் பக்தர்கள் குளிப்பதற்கு குடிநீர் தொட்டிகள் 10 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

சூரசம்ஹார நடக்கும் கோயில் கடற்கரைப் பகுதி முழுவதும் ஜே.சி.பி இயந்திரம் மூலம் சமப்படுத்தப்பட்டு சுத்தப்படுத்தும் பணி கடந்த இரண்டு நாள்களாக மும்முரமாக நடந்து வருகின்றன. கோயில் வளாகத்தில் வாகனங்கள் நிறுத்தப் போதிய இடவசதி இல்லாததால் நகரின் வெளிப்பகுதியில் காலியாக உள்ள இடங்களில் வாகன நிறுத்துமிடம் தயார் செய்யப்பட உள்ளன. கந்தசஷ்டி விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.