தருமபுரிக்கு வந்த சோதனை.. தலைகீழாக கவிழ்ந்த பெருமாள் சிலை.. சொர்க்க வாசல் திறப்பில் அதிர்ச்சி

தருமபுரி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தருமபுரியில் உள்ள பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. பல்லக்கில் பவனி வந்த பெருமாள் சிலை எதிர்பாராத விதமாக தலைகீழாக கவிழ்ந்ததை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் வைணவ தளங்களில் இன்று சொர்க்கவாசல் திறப்பு கோலாகலமாக நடைபெற்றது. பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நள்ளிரவு 1.40 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தனர். இதனையடுத்து தங்க ரத ஊர்வலம் நடைபெற்றது.

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பக்தர்களின் கோவிந்தா… ரங்கா… கோஷங்களுக்கிடையே அதிகாலை 4 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பாண்டியன் கொண்டை சூடி.. ரத்ன அங்கி அணிந்து நம்பெருமாள் எழுந்தருளினார். பக்தர்கள் கோவிந்தா முழக்கத்துடன் நம்பெருமாளை பின்தொடர்ந்தனர்.

தருமபுரி கோட்டை அருள்மிகு வரலஷ்மி சமேத பரவாசுதேவ பெருமாள் சுவாமி திரு கோவிலில் அதிகாலை மணி 5.30 க்கு பரமபத வாசல் என்னும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீவர மகாலட்சுமி சமேத பரவாசு தேவர் சொர்க்க வாசலில் எழுந்தருளி தூப தீப நைவேத்தியம் செய்து சொர்க்கவாசல் பிரவேசம் செய்தனர்.

இன்று அதிகாலை 2 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது பரமபத வாசல் வழியாக சாமி புறப்பாடு நடந்து கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் அளித்தார். ஒரு லட்சம் லட்டுகள் தயாரித்து விழாக்குழுவினர் பக்தர்களுக்கு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் இரவு முழுவதும் காத்திருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

தருமபுரியில் உள்ள மற்றொரு பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் உற்சவர் சிலையை பல்லக்கு தூக்கி கோவிலை சுற்றி வலம் வந்தனர். ஒரு கட்டத்தில் பக்தர்கள் பக்தி பரவசத்தில் பல்லக்கை வைத்துக் கொண்டு வேகமாக ஆடினர். அப்போது பெருமாள் சிலை எதிர்பாராத விதமாக தலைகீழாக கவிழ்ந்தது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் பெருமாள் சிலையை தூக்கி பல்லக்கில் வைத்து வலம் வந்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உற்சவர் சிலையை சரியாக கட்டாமல் விட்டதினாலேயே கீழே விழுந்து விட்டதாக பக்தர்கள் தெரிவித்தனர். இதனால் ஊருக்கு பாதிப்பு எதுவும் ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்றும் பேசிக்கொண்டனர் பக்தர்கள்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *