“தமிழ், கலைக்காக அர்ப்பணித்தோருக்கு வாழும் காலத்திலேயே விருது வழங்கி கவுரவம்” – இசைஞானி இளையராஜா புகழாரம்

சென்னை: தமிழ், கலை, இலக்கியம், அறிவியல், வரலாற்றுக்காக தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர்களுக்கு, அவர்கள் வாழும் காலத்திலேயே விருது வழங்கி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் கவுரவித்து வருகிறது என்று சென்னையில் நடைபெற்ற ராம்ராஜ் காட்டன் வழங்கும் ‘இந்து தமிழ் திசை – யாதும் தமிழே 2023’ விழாவில் இசைஞானி இளையராஜா புகழாரம் சூட்டினார்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் 2013 செப்.16-ல் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டு நிறைவின்போதும் வாசகர் திருவிழா நடத்தப்பட்டு வந்தது. தமிழ் ஆளுமைகளுக்கு மணிமகுடம் சூட்டி மகிழும் விதமாக 2017 முதல் 2019, 2022 ஆகிய ஆண்டுகளில் ‘தமிழ் திரு’ விருதுகள் வழங்கும் விழாக்களும் நடத்தப்பட்டு வருகிறது. 4-வது ஆண்டாக ராம்ராஜ் காட்டன் வழங்கும் ‘இந்து தமிழ் திசை – யாதும் தமிழே 2023’ விழா சென்னை காமராஜர் அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்த விழாவில் பார்ட்னராக பொன்வண்டு டிடர்ஜெண்ட், கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடெமி, ஆர்வம் ஐஏஎஸ் அகாடெமி, குட்வில் வெல்த் மேனேஜ்மெண்ட், சரவணா ஸ்டோர் (சூப்பர் ஸ்டோர், சூப்பர் ஜூவல்லரி) ஆகியவை இணைந்திருந்தன. இவ்விழாவில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ஆசிரியர் கே.அசோகன் வரவேற்றார்.

விழாவின் சிறப்பம்சமாக, தங்கள் செயல்பாடுகளால் தமிழ்ச் சமூகத்தை செழுமைப்படுத்தி அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்ற கல்விச் செயற்பாட்டாளரும், பெண்ணுரிமைப் போராளியுமான பேராசிரியர் வே.வசந்தி தேவி, திரைப்பட வரலாற்று ஆய்வாளரும், சுற்றுச்சூழல் எழுத்தாளருமான சு.தியடோர் பாஸ்கரன், கரிசல் வட்டார எழுத்தாளர் மு.சுயம்புலிங்கம், அறிவியலாளர் என்.கலைச்செல்வி ஆகிய 4 பேருக்கு ‘தமிழ் திரு’ விருதுகளையும், நாட்டியக் கலைஞரும்,

திரைக் கலைஞருமான வைஜெயந்தி மாலா பாலிக்கு ‘தமிழ் திரு’ வாழ்நாள் சாதனையாளர் விருதையும், ‘தி இந்து’ குழும இயக்குநர் விஜயா அருண், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ஆசிரியர் கே.அசோகன் ஆகியோர் வழங்கினர். ஐவருக்கும் விருதுகளோடு ரூ.1 லட்சம் காசோலையும் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் ‘இசைஞானி’ இளையராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றியதாவது: ஒரு பத்திரிகை 10 ஆண்டுகளைக் கடந்து 11-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும்போது, நம் தமிழ் மொழிக்காக, இலக்கியத்துக்காக, கல்விக்காக, அறிவியலுக்காக, வரலாற்றுக்காக என்று தம் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஆளுமைகளைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் வாழும் காலத்திலேயே விருது வழங்கி அங்கீகரிக்கும் இந்த ‘தமிழ் திரு’ விருது என்கிற பணி மிகச் சிறந்த செயல்.

பரதக் கலையை அதன் தெய்வீகம், கலையழகு, அதன் பாரம்பரிய அம்சம் சிதையாமல் அடுத்து வரும் தலைமுறைக்கு எடுத்துச் சென்றவர் வைஜெயந்தி மாலா பாலி. கலையுலகின் பிரதிநிதியாக இருந்து அவருக்கு வழங்கப்படும் இந்த விருதில் நானும் பெருமை கொள்கிறேன். ‘தமிழ் திரு’ விருதுகளைப் போலவே, தமிழ்நாடு அளவில் சிறந்த ஆசிரியர்களுக்கு ‘அன்பாசிரியர் விருது’, சிறந்த மருத்துவர்களுக்கு ‘மருத்துவ நட்சத்திரம் விருது’ என மேலும் 2 விருதுகளை வழங்கி வருவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

‘இந்து தமிழ் திசை’ தேர்தல் ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை ஒவ்வொரு தேர்தலின்போதும் பிரச்சாரம் செய்வது, மதுவின் கொடுமைகளைப் புள்ளி விவரங்களுடன் தொடர் வெளியிட்டது, ஆறுகள் அழிக்கப்படுவதைப் பற்றி ஆதாரத்துடன் எடுத்துக் காட்டியது, அதீத இணையப் பயன்பாடும், ஸ்மார்ட் போனில் மூழ்கி உடலையும், ஆன்மாவையும் அழித்துக்கொள்ளும் அபாயகரமான கலாச்சாரமாக தற்போது மாறிக்கொண்டிருப்பதற்கு எதிராக, ‘டிஜிட்டல் – டிஅடிக்‌ஷன்’ விழிப்புணர்வையும் உருவாக்கி வருகிறீர்கள்.

எல்லாவற்றுக்கும் ஸ்மார்ட் போனில் விடை தேடும் போக்குக்கு நடுவே, வாசிப்பின் அவசியம் எவ்வளவு முக்கியமானது என்பதை எடுத்துக்காட்டப் புத்தக கண்காட்சிகளுக்கு நீங்கள் தரும் முக்கியத்துவம்போல் வேறு எவரும் தருவதில்லை. பொது வாழ்வில் இருக்கும் யார் தவறு செய்தாலும் சுட்டிக்காட்டுவது, அவர்கள் சாதனை புரியும்போது தட்டிக்கொடுப்பது என்ற ஊடக அறம், மென்மேலும் உங்கள் நாளிதழில் இன்று போல் என்றைக்கும் தழைத்தோங்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் முன்னதாக நந்தினி வெங்கட்ராமன், ஸ்ரீவரலட்சுமி மாயா ஆகிய கர்னாடக இசைக் கலைஞர்களின் தமிழ் இசை நிகழ்ச்சியும், கிரேசி மோகனின் சாக்லேட் கிருஷ்ணா மாது பாலாஜியின் சிரிப்பு நாடகமும் நடைபெற்றன. ‘தமிழ் சினிமாவும், இலக்கியமும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில், இயக்குநர் வசந்த பாலன், சு.வெங்கடேசன் எம்.பி., எழுத்தாளர் ஷாஜி ஆகியோர் பங்கேற்று பேசினர்.

நிகழ்ச்சியின் முடிவில் இணைப்பிதழ் பிரிவு துணை ஆசிரியர் ஆதி வள்ளியப்பன் நன்றி தெரிவித்தார். தலைமை உதவி ஆசிரியர் ம.சுசித்ரா, முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *