தஞ்சாவூர் பெரிய கோயிலில் அக்.24, 25-ல் சதய விழா!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழா இம்மாதம் 24, 25-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக சதய விழாக் குழுத் தலைவர் து. செல்வம் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “மாமன்னன் ராஜராஜ சோழன் முடி சூட்டிய நாளை அவன் பிறந்த நட்சத்திரமான ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழா மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் அக்டோபர் 24-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

இதைத் தொடர்ந்து, தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் புலத் தலைவர் கோ.தெய்வநாயகம் தலைமையில் நடைபெறும் கருத்தரங்கத்தில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அலுவலர் மு. ராஜேந்திரன், இந்திய தொல்லியல் துறை கோயில் அளவீட்டுப் பிரிவு இயக்குநர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணன், ரயில்வே காவல் கண்காணிப்பாளர் த.செந்தில்குமார், சைவ சித்தாந்தப் பேராசிரியர் வீ. ஜெயபால், குந்தவை நாச்சியார் கல்லூரி பேராசிரியர் இந்திரா அரசு, சோழர் வரலாற்று ஆய்வு சங்கத் தலைவர் அய்யம்பேட்டை ந. செல்வராஜ் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

பின்னர், மாலையில் திருமுறைப் பண்ணிசை, நாத சங்கமம், திருமுறை இசை ஆகியவற்றைத் தொடர்ந்து 5.30 மணிக்கு தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் 1038 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டிய சிறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மேலும் இரவு 7 மணிக்கு கவிதைப்பித்தன் தலைமையில் கவியரங்கம், 8.15 மணிக்கு சிவதாண்டவம், 8.30 மணிக்கு இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

சதய விழா நாளான அக்டோபர் 25 -ம் தேதி காலை 7.20 மணிக்கு மாமன்னன் சிலைக்கு மாலை அணிவித்தல், 8 மணிக்கு திருமுறைத் திருவீதி உலா, காலை 9.10 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகிக்கு பேரபிஷேகம், பிற்பகல் 1.40 மணிக்கு பெருந்தீப வழிபாடு, மங்கள இசை, நடன நிகழ்ச்சி, தேவார இன்னிசை, மாலை 4 மணிக்கு

நாட்டியாஞ்சலி, நாத சங்கமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள நிறைவு விழாவில் முனைவர் அ. தட்சிணாமூர்த்தி, மருத்துவர் எம். செல்வராஜ், ஓய்வு பெற்ற வேளாண் இணை இயக்குநர் வ.பழனியப்பன், கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு மாமன்னன் ராசராசன் விருது வழங்கப்படவுள்ளது. இதையடுத்து, இரவு 8 மணிக்கு சுகிசிவம் நடுவராகப் பங்கேற்கும் பட்டிமன்றம் நடைபெறவுள்ளது. நிகழாண்டு இவ்விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது’’ எனத் தெரிவித்தார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *