‘டுவெல்த் பெயில்’ (இந்தி / தமிழ்) விமர்சனம்

மத்திய பிரதேசம் சம்பல் பள்ளத்தாக்கில் உள்ள சிறு கிராமத்தில் வசிக்கிறான் ஏழை மாணவன் மனோஜ் குமார் சர்மா. பிளஸ்2 படித்துக்கொண்டிருக்கும் அவனை பொதுத்தேர்வில் காப்பி அடிக்க பள்ளி நிர்வாகமே சுதந்திரம் அளிக்கிறது. அவனும் காப்பி அடிக்கிறான். ஆனால் அப்போது ரெய்டு வரும் நேர்மையான போலீஸ் அதிகாரியால் மனோஜ் தேர்வில் தோல்வி அடைகிறான். ஒரு கட்டத்தில் செய்யாத குற்றத்துக்கு சிறைக்கு போகும்போது, அதே நேர்மையான போலீஸ் அதிகாரி அவனை விடுவிக்கிறார். அன்று முதல் தானும் அவரைப் போல் போலீஸ் அதிகாரியாக வேண்டும் என மனோஜ் விரும்புகிறான்.

அதற்கு என்ன செய்ய வேண்டும் என அந்த அதிகாரியிடமே கேட்கும்போது, பள்ளி தேர்வில் cheating செய்வதை விட வேண்டும் என்கிறார். மறு வருடம் தேர்வில் அனைவரும் cheat செய்ய மனோஜ் மட்டும் நேர்மையாக எழுதி பிளஸ்2 பாஸ் ஆகிறான். அதன் பிறகு தனது கனவை நோக்கி அவன் பயணிக்க தொடங்கும்போதுதான், அவனது முயற்சிகள் அனைத்தும் போராட்டகரமாக அமைகிறது. பலமுறை விழுகிறான். அவன் எழுந்தானா, எழுந்து வென்றானா என்பதுதான் ‘டுவெல்த் பெயில்’ படத்தின் கதை.

இது நிஜ சம்பவங்களின் பின்னணியில் அனுராக் பாட்டக் எழுதிய ‘டுவெல்த் பெயில்’ நூலை தழுவி உருவான படமாகும். ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் குமார் சர்மாவின் வாழ்க்கை கதை படமிது. இந்த படத்தை அனுராக் பாட்டக்கின் நூலை படிப்பதை விட விறுவிறுப்பாக படமாக்கி இருப்பதுதான் விசேஷம். எந்த இடத்திலும் படம் தொய்வடையவில்லை. மாறாக, ஒவ்வொரு இடமும் கைதட்டலை தியேட்டர்களில் ஒலிக்க செய்திருக்கிறது. இது முழுக்க முழுக்க, திரைக்கதை ஆசிரியரும் இயக்குனருமான விது வினோத் சோப்ராவின் கைங்கர்யம்தான். தனது 37 வருட திரை அனுபவத்தை ஃபிரேம் டு ஃபிரேம் காட்டி மிரட்டியிருக்கிறார் மனிதர்.

அவருக்கு பக்க பலமாக நின்றிருப்பது மனோஜ் குமார் சர்மாவாக நடித்திருக்கும் விக்ராந்த் மாஸேதான். தேர்வுக்கு படிக்காமல் காப்பி அடிக்க போருக்கு செல்வது போல் தயார் ஆகும்போதும், பின் திருந்தி அந்த போலீஸ் அதிகாரியின் நடவடிக்கைகளில் லயித்துப்போகும்போதும், தனது பென்ஷன் சேமிப்பு பணத்தை முழுவதும் கொடுத்துவிடும் பாட்டியின் செல்லப்பிள்ளையாக இருக்கும்போதும், உன் அப்பா திருடன் என சொல்லும்போது செருப்பை கழற்றி அடிக்கப்போகும் சமயத்திலும், தனக்குகூட ஒரு அழகான பெண் தோழியாக கிடைத்திருக்கிறாள் என்ற உணர்வை வெளிப்படுத்தும்போதும் அந்த மாவு மில்லில் 12 மணி நேரம் வேலை செய்துகொண்டே படிக்கும்போது சோர்ந்து போன உடலையும் உடல்மொழியையும் காட்டும்போதும் விக்ராந்த் மாஸே நடிப்பில் மாஸ்டர் ஆகிறார்.

இந்திய சினிமாவில் ஜாம்பவான் நடிகர்கள் அத்தனை பேரையும் இந்த சின்ன பையன் ஓவர்டேக் செய்வதுதான் இந்த படத்தின் சிறப்பு. மனோஜ் குமாரின் காதலியாக நடித்திருக்கும் புதுமுகம் மேதா சங்கர், சிம்பிளாக மனதுக்குள் நுழைகிறார். 60 வயது ரசிகனையும் காதலிக்க தூண்டுகிறது இவரது மேனரிசங்கள். 4 ஐபிஎஸ் அட்டம்ப்ட்டில் தோற்றபிறகும் துவண்டு போகாமல் ஏழை மாணவர்களுக்காக ஆசிரியராக மாறும் அன்ஷுமான் புஷ்கர் ஃபீல்குட் உணர்வுகளை ரசிகர்களிடம் கடத்துகிறார்.

படிப்பில் நாட்டமில்லாத நண்பன் ஆனந்த் ஜோஷி, பாட்டி சரிதா ஜோஷி, அப்பா ஹரிஷ் கன்னா என அத்தனை பேருமே தங்களது நடிப்பால் ஆழ்மனதுக்குள் சீட் போட்டு அமருகிறார்கள். சம்பல் பள்ளத்தாக்கின் தூசு படர்ந்த கிராமத்திலும் நெரிசல் மிகுந்த பரபரப்பான டெல்லி நகரிலும் நாம் உலாவதுபோன்ற உணர்வை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரங்கராஜன் ராமபத்ரன்.

சாந்தனு மோய்த்ராவின் பின்னணி இசை கதை சொல்லியாக மாறியிருக்கிறது. கிளைமாக்சில் ஐபிஎஸ் இன்டர்வியூவில், அரசியல்வாதிகள் பற்றியும் நமது நாட்டை பற்றியும் விக்ராந்த் மாஸே பேசும் வசனங்களில் தியேட்டர்களில் கைதட்டல் அடங்க நேரமாகிறது. பல இடங்களில் நம்மை கண் கலங்க வைக்கிறது விது வினோத் சோப்ராவின் திரை மொழி. இந்த படத்தை பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »