டீன் எல்கர் அபார சதம் தென் ஆப்ரிக்கா முன்னிலை

செஞ்சுரியன்: இந்திய அணியுடனான முதல் டெஸ்டில், டீன் எல்கரின் அபார சதத்தால் தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது. சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்துவீச, இந்தியா முதல் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன் எடுத்திருந்தது (59 ஓவர்). கே.எல்.ராகுல் (70 ரன்), சிராஜ் (0) இருவரும் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடி 9வது விக்கெட்டுக்கு 47 ரன் சேர்த்தது. சிராஜ் 22 பந்தில் 5 ரன் எடுத்து கோட்ஸீ பந்துவீச்சில் வெர்ரைன் வசம் பிடிபட்டார். 95 ரன்னில் இருந்து இமாலய சிக்சருடன் சதத்தை பூர்த்தி செய்த ராகுல் 101 ரன் (137 பந்து, 14 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி பர்கர் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். இந்தியா முதல் இன்னிங்சில் 245 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (67.4 ஓவர்). பிரசித் கிருஷ்ணா (0) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் ரபாடா 5, பர்கர் 3, யான்சென், கோட்ஸீ தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. மார்க்ரம் 5 ரன்னில் வெளியேற, டீன் எல்கர் – டோனி டி ஸோர்ஸி ஜோடி 2வது விக்கெட்டுக்கு 93 ரன் சேர்த்தது. ஸோர்ஸி 28, கீகன் பீட்டர்சன் 1 ரன் எடுத்து பும்ரா வேகத்தில் பெவிலியன் திரும்பினர். அடுத்து எல்கர் – டேவிட் பெடிங்காம் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 131 ரன் சேர்த்தனர். இந்த தொடருடன் ஓய்வு பெற உள்ள எல்கர் சதம் விளாச, அறிமுக வீரர் பெடிங்காம் அரை சதம் அடித்து அசத்தினார்.

பெடிங்காம் 56 ரன் (87 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), கைல் வெர்ரைன் 4 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். தென் ஆப்ரிக்கா 66 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 256 ரன் எடுத்த நிலையில், போதிய வெளிச்சம் இல்லாததால் 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்திய பந்துவீச்சில் பும்ரா, சிராஜ் தலா 2, பிரசித் 1 விக்கெட் வீழ்த்தினர். டீன் எல்கர் 140 ரன், மார்கோ யான்சென் 3 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 5 விக்கெட் இருக்க, 11 ரன் முன்னிலையுடன் தென் ஆப்ரிக்கா இன்று 3ம் நாள் ஆட்டத்தை விளையாடுகிறது.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *