செமஸ்டர் தேர்வு தள்ளிபோவதால் மாணவர்கள்… கலக்கம்; முன்பே நடத்தி முடிவுகளை வெளியிட கோரிக்கை

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் மட்டுமின்றி, இணைப்பு கல்லுாரிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

ஆண்டுதோறும் இணைப்பு கல்லுாரிகளில் 10 ஆயிரம் மாணவ, மாணவிகள் இறுதியாண்டு தேர்வினை எதிர் கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு கல்வியாண்டும் பல்கலைக்கழகம் முன்கூட்டியே திட்டமிட்டு, வகுப்புகளையும், தேர்வுகளையும் நடத்துவது வழக்கம்.

ஆனால் கொரோனாவிற்கு பின் பல்கலைக்கழகத்தின் கல்வியாண்டு அட்டவணை இணைப்பு கல்லுாரிகளுக்கு புரியாத புதிராக மாறிவிட்டது. பொதுவாக கல்வியாண்டின், முதல் பருவ செமஸ்டர் ஜூன் மாதம் துவங்கி டிசம்பரில் முடிவடையும். இறுதி மாதமான டிசம்பரில் செமஸ்டர் தேர்வு நடக்கும்.

அடுத்த பருவத்திற்கான செமஸ்டர் தேர்வினை ஜனவரியில் துவங்கி மே மாதத்துடன் முடித்து விட வேண்டும். மே மாதம் செமஸ்டர் தேர்வு நடக்கும். அதன்படி, டிசம்பர் மாதத்தில் அனைத்து பி.டெக்., படிப்புகளுக்கும் வரும் 14ம் தேதி துவங்கி, 21ம் தேதி வரை செமஸ்டர் தேர்வு நடக்கும் என்றும், அனைத்து முதுகலை, இளங்கலை படிப்புகளுக்கு டிச.13ம் தேதி துவங்கி, 21ம் தேதி வரை செமஸ்டர் தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.இப்போது அனைத்து தேர்வுகளையும் புதுச்சேரி பல்கலைக்கழகம் திடீரென தள்ளி வைத்துள்ளது.

அதன்படி, பி.டெக்., படிப்புகளுக்கு அடுத்தாண்டு ஜனவரி 12ம் தேதி துவங்கி, 23ம் தேதி வரையிலும், கலை அறிவியல் படிப்புகளுக்கு அடுத்தாண்டு 10ம் தேதி துவங்கி, 20ம் தேதி வரை நடக்கும் என, புதிய அட்டவணை வெளியிட்டுள்ளது.

இது இறுதியாண்டு மாணவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மாணவர்கள் கூறுகையில், ‘கலை அறிவியல் படிப்பிற்கு டிசம்பர் மாதத்திற்கான ஐந்தாவது செமஸ்டர் தேர்வு ஒரு மாதம் தாமதமாக ஜனவரி இறுதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விடைத்தாள் திருத்தம், மறு கூட்டல் என, ஏப்ரல் மாதம் முழுதும் உருண்டோடி விடும்.

அடுத்த மே மாதம் நடத்தப்பட வேண்டிய,ஆறாவதுசெமஸ்டர் தேர்வும் ஜூன் அல்லது ஜூலை தாண்டி தான் நடத்தப்படும். அதன் பிறகு ஆகஸ்ட், செப்டம்பரில் தான் இறுதியாண்டு மாணவர்களுக்கான 6வது செமஸ்டர் தேர்வு முடிவு வெளியிடப்படும். புரொவிஷனல் சான்றிதழ் அப்போது தான் கிடைக்கும்.

இதனால் புதுச்சேரி மாணவர்கள் தமிழகம் உள்பட வெளி மாநில கல்லுாரியில் விண்ணப்பிக்க முடியாது. ஏனெனில் அனைத்து மாநிலங்களில் கல்லுாரி மாணவர் சேர்க்கை முடிந்து விடும்.

அப்படியே விண்ணப்பித்து சீட் கிடைத்தாலும் புரொவிஷன் சான்றிதழ், மதிப்பெண் பட்டியலைபுதுச்சேரி மாணவர்களால் காலத்தோடு சமர்ப்பிக்க முடியயா.

இதனால் அம்மாணவர்களின் உயர் கல்வி ஓராண்டுவீணாகும். கடந்தாண்டும் கூட இப்படி தான் நடந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிற மாநிலங்களில் உயர் கல்வி சேர முடியாத சூழல் ஏற்பட்டது.

எனவே இறுதியாண்டு மாணவர்கள் உள்பட அனைத்து மாணவர்களுக்கும் கொரோனாவிற்கு முன்பு எப்படி இருந்ததோ, அதன்படி புதுச்சேரி பல்கலைக்கழகம் தேர்வு நடத்தி, முடிவுகளை வெளியிட்டு புரோவிஷனல் சான்றிதழ் தர வேண்டும்.

இது தொடர்பாக கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, பொறுப்பு துணை வேந்தருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *