சுடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லாததால் ஆபத்தான நிலையில் ஆற்றை கடக்கும் மக்கள்

காணை அருகே சுடுகாட்டிற்குச் செல்ல பாதை இல்லாததால் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் நீரில் இறங்கி சடலத்தை சுமந்து செல்லும் அவலம் உள்ளது.

காணை அடுத்த குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 76; இவர், நேற்று முன்தினம் இரவு உடல் நலக்குறைவால் இறந்தார். இவரது இறுதி ஊர்வலம் நேற்று மாலை நடந்தது. ஒன்றரை கி.மீ., துாரம் உள்ள பொது சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

சுடுகாட்டிற்கு பாதை இல்லாததால், பம்பை ஆற்றில் இடுப்பளவு வரை தண்ணீர் கரைபுரண்டு ஓடிய நிலையில் வேறு வழியின்றி உறவினர்கள் சிலர் மட்டும் சடலத்தை துாக்கிக் கொண்டு ஆற்று நீரில் அச்சத்தோடு கடந்து சென்றனர்.

மேலும், இந்த ஆற்றைக் கடந்து சாணிமேடு, வெங்கந்துார், சூரப்பட்டு, கெடார் ஆகிய கிராமங்களுக்குச் செல்ல பாதை இல்லாததால் இந்த ஆற்றை சுற்றிலும் 300 ஏக்கர் விவசாய பாசன நிலங்களில் விளையும் பொருட்களையும், உரங்களை விவசாயிகள் வாகனங்களில் கொண்டு செல்ல ஆற்று பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

மழைக் காலங்களில் ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் பொதுமக்கள், விவசாயிகள் கடும் சிரமம் அடைகின்றனர்.

இதனால், இப்பகுதியில் மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் கண்டு கொள்வதில்லை. இனியாவது தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காலம் முடிந்ததும் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *