சிதம்பரம்: கனகசபை மீது பக்தர்கள் வழிபட தீட்சிதர்கள் மறுப்பு – காவல்துறையில் புகார்

சிதம்பரம் கோயிலில் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபாடு நடத்துவதற்கு தீட்சிதர்கள் அனுமதி மறுத்து வருகின்றனர். ஆருத்ரா தரிசம் நடைபெற்று வரும் நிலையில் டிசம்பர் 25 ஆம் தேதி முதல் டிசம்பர் 28ஆம் தேதி கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இந்துசமய அறநிலையத்துறை அனுமதி வழங்கியது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் தீட்சிதர்கள், கனகசபை மீது பக்தர்கள் ஏறி சாமி தரிசனம் செய்யும் நடையை அடைத்து வைத்து அதனை திறக்காமல் இருக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் சந்திரன், தில்லை காளியம்மன் கோவில் செயல் அலுவலர் சரண்யா மற்றும் அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் கனகசபையின் மீது பக்தர்களை ஏற்ற வேண்டுமென தீட்சிதர்களிடம் கேட்டுள்ளனர். அதற்கு தீட்சிதர்கள் மறுப்பு தெரிவித்திருக்கின்றனர். இதனையடுத்து செயல் அலுவலர் சரண்யா சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் பணி செய்ய விடாமல் தடுத்ததாக தீட்சிதர்கள் மீது புகார் அளித்துள்ளார். இதனால் இந்த சர்ச்சை மீண்டும் விஸ்வரூபமெடுத்துள்ளது.

கனகசபை வழக்கு பின்னணி

நடராஜர் கோயில் பொன்னம்பல மேடையில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து கடந்த ஆண்டு மே 17-ம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் டி.ஆர்.ரமேஷ் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் சோழ மன்னர்களால் உருவாக்கப்பட்டு மக்களின் பங்களிப்பின் மூலம் நிர்வகிக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோயில் ஒரு பொது கோயில் என்றும் தீட்சிதர்களுக்கு சொந்தமானது அல்ல என்றும் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்து உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆண்டு ஆண்டுகாலமாக பின்பற்று வந்த கனகசபையில் இருந்து தரிசனம் செய்யும் நடைமுறை கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டு இருந்ததாகவும், பக்தர்களை கனகசபையில் இருந்து தரிசனம் செய்ய அனுமதிப்பது குறித்து அரசு முடிவெடுக்கலாம் என கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின் அடிப்படையில் பொதுமக்கள், தீட்சிதர்கள் உள்ளிட்டோருடன் கலந்து ஆலோசித்தும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி. ஆகியோர் அளித்த அறிக்கைகளை பரிசீலித்தும் அரசாணை பிறப்பிக்கப்பட்டதாக பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. கனகசபையில் தரிசனம் செய்யும் நடைமுறையை மாற்ற தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் கனகசபை தரிசனத்திற்கு அனுமதி அளித்ததை எதிர்ப்பது ஆலய பிரவேச சட்டத்துக்கு எதிரானது எனவும் இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

கனகசபையில் தரிசனம் செய்ய அனுமதித்து அரசாணை மூலம் தங்கள் உரிமை பாதிக்கப்பட்டதாக தீட்சிதர்கள் தெரிவிக்காத நிலையில், எந்த தகுதியும் இல்லாதா இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என பதில் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பதில் மனுவுக்கு பதில் அளிக்க மனுதாரர் தரப்புக்கு அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்திருக்கிறது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *