சாதியை இறுகப்பற்றிய பாஜக.. மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் மட்டுமில்ல.. 11 அமைச்சர்களும் ஓபிசிதான்

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் 28 சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்ட நிலையில் அவர்களில் 11 பேர் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்து உள்ளது.

கடந்த நவம்பர் மாதம் மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற்று டிசம்பர் மாதம் முடிவுகள் வெளியாகின. மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸை வீழ்த்தி பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை தக்க வைத்தது. ஆனால், அம்மாநில முதலமைச்சராக இருந்த சிவராஜ் சிங் சவுஹானை கழற்றிவிட்ட பாஜக, அவருக்கு பதிலாக மோகன் யாதவை முதலமைச்சராக தேர்வு செய்தது.

ஓபிசி சமுதாயத்தின் ஆதரவை, குறிப்பாக யாதவ சமூகத்தின் ஆதரவை பெறும் வகையில் மோகன் யாதவை முதலமைச்சராக பாஜக தலைமை தேர்வு செய்தது. அவர் கடந்த 13 ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் துணை முதலமைச்சர்கள் ராஜேந்திர சுக்லா, ஜெகதீஷ் தேவ்தா ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டார்கள். இந்த நிலையில், இன்று மத்திய பிரதேச மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

அதன்படி 28 எம்.எல்.ஏக்கள் இன்று மதியம் பதவியேற்றுக் கொண்டார்கள். இவர்களில் குறிப்பாக மத்திய அமைச்சர் பிரகலாத் பட்டேல் மற்றும் பாஜக தேசிய செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியாவும் அடக்கம். இவர்களில் 18 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 10 பேர் ஜூனியர் அமைச்சர்களாகவும் அறிவிக்கப்பட்டு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்கள். பெண்களின் பெரும் ஆதரவால் பாஜக மத்திய பிரதேசத்தில் வெற்றிபெற்றதாக கூறப்பட்ட நிலையில் 5 பெண்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்து உள்ளது.

இதில் முதலமச்ச்சர் மோகன் யாதவ் உட்பட கேபினட் அமைச்சர்களில் 12 பேர் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. துணை முதலமைச்சர்களில் ஜக்தீஷ் தேவ்தா பட்டியலின சமுதாயத்தையும், ராஜேந்திர சுக்லா பிராமண சமுதாயத்தையும் சேர்ந்தவர். அதேபோல் 2019 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கலைக்கப்பட்டபோது ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுக்கு ஆதரவாக இருந்த 4 எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல் மூத்த நிர்வாகிகள் மற்றும் இளையவர்கள் என கலவையாகவே அமைச்சரவையை பாஜக தேர்வு செய்து இருக்கிறது.

முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான், மூத்த நிர்வாகிகள் கோபால் பார்கவா, பூபேந்திர சிங் உள்ளிட்டோருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை. கடந்த 22 நாட்களுக்கு முன் பேசிய மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், “எந்த அவசரமும் இல்லை. புதிய அமைச்சரவை விரைவில் உருவாக்கப்படும்.” என்றார். இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுடன் மத்திய பிரதேச பாஜக நிர்வாகிகள் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி அமைச்சர்களை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.

இந்த அமைச்சர்கள் தேர்வை பாஜக 2024 மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து செய்து இருப்பது தெளிவாக தெரிகிறது. இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த முதலமைச்சர்கள், 11 அமைச்சர்கள், பட்டியலின துணை முதலமைச்சர், பிராமண துணை முதலமைச்சர் என அனைத்து சாதியினரையும் திருப்திபடுத்தும் விதமாக தேர்வு செய்து இருக்கிறது பாஜக. உபியில் சமாஜ்வாடி, பீகாரில் ஆர்ஜேடி, ஜேடியு ஆகிய ஓபிசி ஆதரவு கட்சிகள் இந்தியா கூட்டணியில் உள்ள நிலையில் அதை குறிவைத்து காய் நகர்த்தி இருக்கிறது பாஜக.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *