சக்கரங்கள் ஓய்வதில்லை!-குறுங்கதை

‘ஐயா! வெளஞ்சிடிச்சீங்க!’

என்று பிச்சன் பெருங்குரலில் கூறியதும், கணவனைப் பறிகொடுத்து விட்டுப் படுத்திருந்த அந்தப் பெண்மணி மீண்டும் எழுந்து உரத்த குரலில் ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள்.

’என்னைக் கைப் பிடிச்ச ராசாவே!…’ என்று தொடர்ந்ததும்,

-கூடத்தில்,

-திண்ணையில்,

-இறக்கத்தில்,

-படுக்கை அறைகளில்,

-சமையற்கட்டில்,

-பந்தலில் என்று,

அந்தத் துக்க வீட்டில் படுத்திருந்த அனைவரும் எழுந்து கண்ணைக் கசக்க ஆரம்பித்தார்கள். சில குழந்தைகள் விழித்துக் கொண்டு முழிக்க, மற்ற சில குழந்தைகள் உறக்கத்திலிருந்து விடுபடாமல் படுத்திருந்தார்கள்.

பெண்டூல சுவர்க்கடிகாரம் இரவு மணி பன்னிரண்டரை என்பதை ஒருமுறை அடித்து உணர்த்தி விட்டு ஓய்ந்தது!

‘பார்த்துப் பார்த்து இந்தக் கடிகாரத்தை வாங்கிக்கிட்டு வந்தீங்களே! அது இன்னமும் உயிர்ப்போடு இருக்கையில நீங்க மட்டும் இப்படி எங்களை விட்டுட்டுப் போயிட்டீங்களே!எப்படீங்க ஒங்களுக்கு மனசு வந்தது?’ என்று அந்த அம்மா கதறுகையில், அவர் அங்கு சுடுகாட்டில் சாம்பலாகி,நீர்த்துப் போய்க் கொண்டிருந்தார்.

அவ்வூர் வழக்கப்படி, அடுத்த நாள் சாம்பல் அள்ளலாமா என்பதை முடிவு செய்ய, உடல் எரிந்து முடிந்ததும் நள்ளிரவிலேயே அதனைக் கூற வெட்டியான்கள் வருவார்கள்.

Representational Image

திருவாரூர் மாவட்டத்தின் சின்ன கிராமம் அது. பிச்சன்தான் தலைமை வெட்டியான். அவனுக்கு உதவிட,கூடவே ரெண்டு பேர். ஊர் நாட்டாமைகள் எட்டு பேர். வெட்டியான்கள் மூவருக்கும் ஆளுக்கு மூன்று மா நிலம், அதாவது ஆளுக்கு ஓர் ஏக்கர்,நஞ்சை நிலம் கொடுத்திருந்தார்கள் இந்தப் பணிக்காக. மேல் வருமானங்களும் உண்டு.

ஆற்றுப் படுகையில் சுடுகாடு. ஆற்றின் அக்கரையில் ஒரு கிலோ மீட்டர் தள்ளி பிச்சனின் வீடு. பிச்சனுக்கு வயது எழுபதைத் தாண்டி விட்டது. அவருக்கு இரண்டு பையன்கள். அவர்கள் காலனிக்கு அருகிலேயே இருந்த பெரு நிலப் பரப்பில் உயர்நிலைப் பள்ளி வந்ததால், பிச்சனின் மகன்கள் படிப்பில் கவனம் செலுத்தினார்கள்.

கல்வியோடு மட்டுமல்லாது விளையாட்டிலும் அதிக ஆர்வம் காட்டினார்கள். சலுகைகளும் கை கொடுக்க, உயர் படிப்பை முடித்தார்கள். மூத்தவன் அமெரிக்கக் கம்பனி ஒன்றில் சேர,பின்னர் அமெரிக்காவுக்கே சென்று விட்டான். இளையவன் பணியில் சேர்ந்த பிறகு அப்பாவை அவர் செய்யும் வெட்டியான் வேலையை விடச் சொல்லி இருவருமே வற்புறுத்தினார்கள். ஆனால் பிச்சன் ஒத்துக் கொள்ளவில்லை.

‘நீங்க ரெண்டு பேரும் நல்லாயிருக்கறதில எனக்கு ரொம்பச் சந்தோஷந்தான். அதுக்காக என்னை வேலையை விடச் சொல்லாதீங்க. இது வெறும் வேலையில்ல. இது ஒரு மகத்தான தொண்டு. அதுக்காகத்தான் நாட்டாமைங்க நமக்கு நெலமெல்லாம் கொடுத்திருக்காங்க.

செத்தவங்களை அடக்கம் செய்றதும்,அந்த ஆன்மாக்களை அமைதிப் படுத்துறதும் எல்லோருக்கும் வாய்க்காத பேரு.ஆனா என்னோட காலத்தோட இது முடியப்போகுது.

நீங்கள்லாம் இதைத் தொடரப் போறதில்ல… நானும் ஒங்களைச் செய்யச் சொல்லப் போறதில்ல. நேர்மையா செய்யற எந்தத் தொழிலும் இழிவானதில்ல! என்னை என் வழியில விட்ருங்க…நீங்க ரெண்டு பேரும் ஒங்க வழியைப் பார்த்துக்கிடுங்க!’ என்று சொல்லிய தந்தையை அவர்கள் மேலும் வற்புறுத்தவில்லை. பிச்சனின் ஆசைப்படியே விட்டு விட்டார்கள்.

திருவாரூர் சந்திப்பு

வீட்டுக்கு வந்த பிச்சனுக்கு மனது கனத்தே இருந்தது. எத்தனையோ இறப்புக்களையும், இறந்த உடல்களையும் பார்த்துப் பழகிப்போன அவருக்கு, அன்றைய இறப்பு ஒரு சவாலாக அமைந்து விட்டது. காரணம் இதுதான்.இறந்தவர் தலைமை நாட்டாமையின் மைத்துனர். நாட்டமையோ ரொம்பக் கறார். சாதி, மதம், இனம் என்று அவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். ஆனால் மைத்துனரோ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நாட்டு நடப்புடன் ஒத்துப் போகின்றவர். பெரிய நாட்டாமை, மைத்துனரின் பெண்ணைத்தான் தன் மகனுக்குக் கட்டி வைத்தார்.

பெரிய நாட்டாமையே கோபம், பொறாமை, கர்வம் இவற்றின் இருப்பிடம் என்றால், மகன் சாதாரணமாக இருப்பானா என்ன?’ தான்’ என்ற அகம்பாவத்துடன் அத்தனை பேரிடமும் சண்டை. போகின்ற இடமெல்லாம் அடிதடி.கூடா நட்பு. வேண்டா உறவுகள் என்று எப்போதும் அமைதியின்மை. அப்படி ஒரு நாள் அடுத்த ஊரில் சண்டை போட்டு விட்டு ஆயாசத்துடன் வீடு திரும்பிய போதுதான், எதிரே வந்த லாரி மீது மோதி, ஸ்பாட்டிலேயே உயிரிழந்தான். சிறிய வயதிலேயே மைத்துனரின் மகள் விதவையானாள். ஒரு வருடம் போகட்டும் என்று காத்திருந்த மைத்துனர், தன் பெண்ணுக்கு மறுமணம் செய்ய விரும்பி நாட்டாமையை அணுகினார்.

‘என்ன சொல்றே நீ? என்னோட மருமகளுக்கு மறுமணமா?நீ சுய புத்தியில்தான் பேசறீயா?இனிம இப்படி பேசிக்கிட்டு இந்த வீட்டுப் பக்கம் வந்திடாதே. நான், ஒரு நேரம் இருக்கற மாதிரி மறுநேரம் இருக்க மாட்டேன்னு ஒனக்கும் தெரியுமில்ல. ’என்று நாட்டாமை வானுக்கும் பூமிக்குமாகக் குதித்தார். அன்று அமைதியாகப் போன மைத்துனர், நாட்டாமை ஊரிலில்லாத நேரம் பார்த்துத் தன் மகளின் மறுமணத்தை முடித்து விட்டார். அத்தோடு முடிந்து போனது அவர்கள் உறவு. மறுமணத்துக்கு முதல்நாள் மைத்துனரின் பெண்ணை பிச்சன் தன் வீட்டில்தான் ஒளித்து வைத்திருந்தார்.

அந்த ரகசியம் இன்று வரை மைத்துனருக்கும், பிச்சனுக்கும் மட்டுமே தெரிந்த ஒன்று. இப்பொழுதோ,அந்த ரகசியம்,பிச்சனின் ஏக போக சொத்து. இனி அது வெளியில் வராது.

வாசலில் கிடந்த கயிற்றுக் கட்டிலில் வந்தமர்ந்த பிச்சனின் வழுக்கைத் தலையில், தென்னை மரங்களின் இடையில் தன் ஒளியைப் பாய்ச்சி, நிலா முகம் பார்த்தது. கட்டிலில் கிடந்த மொபைல் அந்த இரவின் நிதானத்தை மறந்து ஒலியெழுப்ப, பிச்சன் அதையெடுத்துக் காதருகில் கொண்டு சென்றார்.

‘நாந்தாம்ப்பா பேசறேன். நல்லா இருக்கீங்களா?’

‘எனக்கென்னப்பா கொறை? நல்லாத்தான் இருக்கறேன். ஆமா…இப்படி அர்த்த ராத்திரியில விழிச்சிக்கிட்டிருந்து ஏன் பேசறே?ஒடம்பு கெட்டுப் போயிடும்பா. நல்லாத் தூங்க வேண்டாமா?’

‘என்னப்பா நீங்க… எனக்கு இங்க நல்ல பகல்.நாந்தான் அன்னைக்கே சொன்னேனே… ஒங்களுக்கு ராத்திரியா இருக்கறப்போ இங்க எனக்குப் பகல்னு! மறந்திட்டீங்களா?’

‘ஆமாமாம்… சொன்னே.. மறந்து போச்சுப்பா… வயசாயிட்டில்ல’

‘நல்லா இருக்கீங்கல்ல… எனக்கு வேற கால் வருது… அப்புறம் பேசறேன்பா!’

மொபலை அணைத்து விட்டுக் கட்டிலில் கால் நீட்டிப் படுத்தார் பிச்சன்.

ஊரார் அமைதி வாழ்வுக்கு அங்கம் வகிக்கும் பிச்சனும்,இறந்து போன மைத்துனரும், அதிகாரம் காட்டும் நாட்டாமையும் மனிதர்கள்தான்.

அவரவர், அவரவர் கடமைகளைப் பார்த்துக்கொண்டு போகிறார்கள்.

நல்லது செய்தால் சக மனிதர்கள் பாராட்டுகிறார்கள்; மதிக்கிறார்கள். அடாவடி செய்தால் அதற்கான தண்டனையை அவர்கள் வாழ்நாளில் அனுபவிக்கிறார்கள்.

Representational Image

காலத்திற்கேற்ற மாற்றம் வேண்டுமென்பதுதான் நியதி.ஒரு காலத்தில் எதிர்க்கப்பட்ட விதவைத் திருமணம் இப்பொழுது ஆதரிக்கப்படுகிறது. ஏற்பட்ட மாற்றங்கள் அனைத்தும், காலத்தின் கட்டாயம். அதை ஏற்படுத்த சில நல்ல உள்ளங்கள் பொறுப்பேற்றுக் கொள்கின்றன.மாறிக் கொண்டே இருக்கும் உலகில், தேவையான மாற்றங்களை அங்கீகரித்து ஏற்றுக் கொள்வதால்தான் இந்து மதம் தழைத்தோங்கிக் கொண்டே போகிறது. அதற்கு எப்பொழுதும் அழிவில்லை. பெண்கள் யாரும் ஓரத்தில் உட்கார வைக்கப்பட்டு விடவில்லை. மாற்றங்கள் எல்லா இடத்தையும் மாற்றிக் கொண்டு வருகிறது.

பிச்சன் கண்ணயர்ந்தார். காலையில் மைத்துனரின் சாம்பல் அள்ள வேண்டும்.

பிச்சனின் மகன், ஜப்பான் கம்பனியுடன் அமெரிக்காவிலிருந்து பேசிக் கொண்டிருந்தான்!

டெல்டா விவசாயிகள் நட்ட பயிரைக் காப்பாற்ற முடியாமல்,கண்ணீர் பீறிடும் கண்களுடன் வானத்தைப் பார்த்தபடி, இஷ்ட தெய்வத்தை,மனங்களில் மழைக்காக வேண்டிக் கொண்டார்கள்.

காலச் சக்கரம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அதன் வேகத்தில் குறையில்லாமல் சுழன்று கொண்டேயிருந்தது.கீழே வரும் சக்கரத்தின் கீழ்ப் பாகம் மேலே செல்வதும்,மேற்சென்ற பகுதி கீழே வருவதும் காலத்தின் கட்டாயமல்லவா?அதுதானே உலக நியதி!

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *