கோவையில் முதலாம் ஆண்டு மாணவருக்கு நடந்த ராகிங்! இரவு முழுவதும் விடாமல் டார்சர்! 7பேர் கைது!

கோவை அவிநாசி சாலையில் தனியார் தொழில்நுட்பக் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. கல்லூரி வளாகத்திலேயே விடுதியும் செயல்பட்டு வருகிறது.  இந்தக் கல்லூரியில்  திருப்பூர் ராயர்பாளையத்தை சேர்ந்த 18 வயதான மாணவர் ஒருவர் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சீனியர் மாணவர்கள் சிலர் இவர் தங்கி இருக்கும் விடுதி அறைக்கு சென்றுள்ளனர். அங்கு அந்த முதலாம் ஆண்டு மாணவரை அழைத்துக்கொண்டு சீனியர் மாணவர்கள் தங்கி இருந்த அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து முதலாம் ஆண்டு மாணவரை அவர்கள் ஆபாசமாக திட்டி தாக்கியதுடன்  மொட்டை அடித்தும், உதைத்தும் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இரவு முழுவதும் அவரை தாக்கியதாகவும், காலை 5.30 மணி வரை சீனியர் மாணவர்கள் அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தனக்கு நடந்த கொடுமைகளை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார் அந்த பாதிக்கப்பட்ட மாணவர். திருப்பூரில்  இருந்து வந்த பெற்றோர், மாணவரை நேரடியாக பார்த்து நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்துள்ளனர்.

அதோடு கல்லூரி நிர்வாகத்திடம் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இந்த ராகிங் செய்தி வெளியே வந்தால் கல்லூரியின் பெயர் கெட்டுவிடும் என்பதால் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என கல்லூரி நிர்வாகம் சமாதானம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தனது மகன் கடுமையாக தாக்கப்பட்டதை கண்டு வேதனையடைந்த பெற்றோர் பீளமேடு காவல் நிலையத்திற்கு சென்று ராகிங் சம்பவம் குறித்து புகார் அளித்தனர்.

இதனையடுத்து உடனடியாக சம்பந்தப்பட்ட சீனியர் மாணவர்களை அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முதலாம் ஆண்டு மாணவரை ராகிங் செய்து  தாக்கி மிரட்டியது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 2 பேர், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 2 பேர், நான்காம் ஆண்டு படிக்கும் 3 மாணவர்கள் ஆகியோரையும் பீளமேடு காவல்துறையினர் கைது செய்தனர். மொத்தமாக 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் மீது ராகிங் சட்ட பிரிவுகள் உட்பட,  ஆபாசமாக பேசுதல்,  ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ராகிங் கொடுமைகள் மீண்டும் தலைதூக்குகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதோடு இதனை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *