'கே.எஸ்.அழகிரிக்கு வெடிகுண்டு மிரட்டல்; காங்கிரஸ் நிர்வாகி கைது' – திகுதிகு திருநெல்வேலி!

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. இதையொட்டி ஒவ்வொரு மாவட்டமாக பயிற்சி பாசறை கூட்டங்களை நடத்தி வருகிறார், கே.எஸ்.அழகிரி. அதன் ஒருபகுதியாக 25-ம் தேதி(இன்று) நெல்லை மாவட்டம், திசையன்விளையில் நெல்லை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சென்றிருந்தார்.

சத்தியமூர்த்தி பவன் – காங்கிரஸ்

முன்னதாக அவர் வரும் பொழுது வெடிகுண்டு வெடிக்கும் என நாங்குநேரி வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் அன்புரோஸ் வாட்ஸ்ஆப் குழுவில் மிரட்டல் விடுத்து பதிவு போட்டுள்ளார். இதையடுத்து அவர் மீது காங்கிரஸ் நிர்வாகி முத்து கிருஷ்ணன் மூன்றடைப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார் அன்புரோஸை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் மகளிர் அணியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கறுப்பு சேலை அணிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நெல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சீனியர் கதர்கள், “பதவி காலம் முடிந்தும் கே.எஸ்.அழகிரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நீடித்து வருகிறார். அந்த பதவியை பிடிப்பதற்கு தீவிரம் காட்டி வருபவர்களில் மிகவும் முக்கியமானவர் நாங்குநேரி எம்.எல்.ஏ ரூபி மனோகரன். இதில் இருவருக்கும் இடையில் மோதல் நீடித்து வருகிறது. அழகிரிக்கு கிலியை கொடுக்க வேண்டும் என்பதற்காக கடந்த ஆண்டு 5-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் தனது ஆதரவாளர்களை சத்தியமூர்த்தி பவனில் இறக்கியிருந்தார், ரூபி மனோகரன். திட்டமிட்டபடி அவர்கள் அழகிரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ரூபி மனோகரன்

இதையடுத்து அவர்கள் மீது கே.எஸ்.அழகிரி ஆதரவாளரான ரஞ்சன் குமார் தாக்குதல் நடத்தியிருந்தார், . இதில் ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். அதன்பிறகு இருதரப்பும் மாறி, மாறி டெல்லிக்கு புகார் கடிதங்களை அனுப்பி வந்தது. இந்நிலையில் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதிக்கான பயிற்சி பாசறை கூட்டத்தை, திசையன்விளையில் இருக்கும் மஹால் ஒன்றில் தனது ஆதரவாளர்கள் மூலமாக நடத்தியிருந்தார், அழகிரி.

அதற்கு ரூபி மனோகரனுக்கு அழைப்பு கொடுக்கவில்லை. இதையடுத்து தனது பலத்தை காட்டும் வகையில் இதுபோன்ற செயல்களை ரூபி மனோகரன் செய்திருக்கிறார். ஆனால் இந்த பிரச்னையை அழகிரி சாதாரணமாக கடந்து செல்ல மாட்டார். பதிலுக்கு தனதுஆட்டத்தை ஆட ஆரம்பிப்பார். இதனால் சத்தியமூர்த்தி பவன் சில நாட்களுக்கு பரபரப்பாகவே இருக்கும்” என்றனர்.

இதுகுறித்து ரூபி மனோகரனின் ஆதரவாளர்களோ, “தலைவருக்கு எதுவும் தெரியாது. அவர் தெலங்கானா தேர்தல் களத்தில் இருக்கிறார்” என சுருக்கமாக முடித்துக்கொண்டனர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *